தூய்மை மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவையில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தூய்மைப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று 08.08.2020 மாநகராட்சி அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கோவை உக்கடம் நவீன மீன் விற்பனை சந்தையில் ஆய்வு செய்து மீன் விற்பனையாளர்களும், பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனர்களா, சுகாதார முறையை சரியாக கடைபிடிக்கின்றார்களா என்பதை பார்வையிட்டும், மீன் கழிவுகள் மற்றும் குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படுகின்றனவா என ஆய்வு செய்து, அங்குள்ள வியாபாரிகளிடம் மீன் வாங்கவரும் பொதுமக்களிடம் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும் என கொரோனா விழிப்புணர்வுக்கான அறிவுரைகளை தெரிவித்தார்.

தொடர்ந்து, சாவித்திரி நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டார். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பின்னர், செல்வபுரம் ஹவுசிங்யூனிட் பகுதியில் தூய்மைப்பணியாளர்கள் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார், அதன் தொடர்ச்சியாக வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து துகல்களாக்கி மண்புழு உரம் தயாரிக்கப்பட்டுவரும் பணிகளையும் பார்வையிட்டும், தொடர்ந்து, வெள்ளலூரில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி, உதவி நிர்வாக பொறியாளர் சுந்தர்ராஜ், மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன், இளம் பொறியாளர் விமல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தார்கள்.