ஒரு நாள் ஊரடங்குத் தேவைக்கு ஆளாய் பறக்கும் மக்கள்

நாளை(8.8.2020)முழு ஊரடங்கு என்பதால் கோவையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் காணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 7வது கட்டமாக கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை(8.8.2020) தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால்தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது.

எனினும் மக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான மீன், இறைச்சி போன்ற அசைவ பொருட்களை இன்றே  வாங்க கடைகளில் குவிந்தனர். இதனால், கோவையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதேபோல், பெரும்பாலான காய்கறி கடைகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.