பேரூர் அருகே தரைப்பாலத்தில் வெள்ளம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி பேரூர் செட்டிப்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆறுமுக கவுண்டனூர், ராமசெட்டிபாளையம் ஊர்களுக்கிடையே ஒரு தரைப்பாலம் உள்ளது.

இதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளான சுண்டக்காமுத்தூர், கவுண்டனூர், போஸ்டல் காலனி, பேரூர், பேரூர் செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், அருகிலுள்ள தோட்டங்களுக்கு கூலி வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட பலரும் இந்த வழியைத்தான் பயன் படுத்தி வருகின்றனர்.

தற்போது கோவையில் கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல் பேரூர் நொய்யல் ஆறு நிறைந்து இந்த தரைப்பாலம் வழியாகத்தான் தண்ணீர் செல்கிறது. இந்த தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் செல்வதால், பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த பாலத்தை ஒட்டி சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்த தரைப்பாலத்தில், கடந்த முறை இதேபோல் இந்த பாலத்தை கடக்க முயன்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை நினைவு கூறும் அப்பகுதியினர், தண்ணீர் அதிகளவில் தரைப் பாலத்தின் வழியே செல்வதால், இந்த வழியாக வாகனங்களில் செல்லும்போது, தண்ணீரில் சிக்கி பழுதாகி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.