திமுக இரட்டை வேடம் போடுகிறது

ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன்

 

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழாவை தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் வசிக்கும் வட இந்திய குடும்பங்களுடன் எளிமையான முறையில் கொண்டாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய இவர், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்த தினம் கொரோனாவால் விழாவை கொண்டாட வாய்ப்பு இல்லாவிட்டாலும், கோவையில் இருக்கும் வட இந்திய குடும்பங்களுடன் எளிமையான முறையில் இன்று விழா கொண்டாடியுள்ளோம் என்றார் .

மேலும் தேசிய கல்வி கொள்கையானது கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட பின்னரே அமலுக்கு வந்துள்ளது. இருமொழி கொள்கையை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தில் கொடுத்த வாக்குறுதி. ஆனாலும், கூடுதலாக மொழிகளை கற்பது பலம் தான்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்திய கல்விக் கொள்கையான சி.பி.எஸ்.சி கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூன்றாவது மொழியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால், இது அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அறிக்கை விடும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

திமுக இரட்டை வேடம் போடுகிறது. அரசியல் செய்கின்றனர்.  வேதங்களை தினிப்பதாக கூறுவது பொய். பா.ஜ.க தீண்டாமைக்கு எதிரான கட்சி. தீண்டாமை ஒழிக்கும் ஆக்கப்பூர்வ சக்தி ஆர்.எஸ்.எஸ். ஆளும் கட்சியும் மும்மொழி கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மொழி அரசியல் செய்ய வேண்டாம். இதனை அனைத்து கட்சிக்கும் சேர்த்து தான் கூறுகின்றேன்.

சி.பி.எஸ்.சி பாட திட்டத்தில் இயங்கும் மத்திய அரசின் கேந்திரவித்யாலயா பள்ளிகளில் எம்.பி.,க்களுக்கு 10 சீட்டுகள் வழங்கப்படுகிறது. மும்மொழிக்கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர் இந்த சீட்டுகளை திருப்பி கொடுக்க தயராக உள்ளனரா? இந்த கல்விசீட்டை சிலர் விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர் என்றார்.