செவிலியர்கள் நாளை ஸ்ட்ரைக்!

”ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால், 11.10.2017-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் இறங்கப்போவதாக தனியார் மருத்துவமனைச் செவிலியர்கள் அறிவித்துள்ளார்கள். அவசரச் சட்டம் இயற்றி ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தையே அனைத்து செவிலியர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உயிர் காக்கும் மருத்துவம் என்று சொல்வதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம், அந்த மருத்துவத்துறையில் பணியாற்றும் தனியார் மருத்துவமனைச் செவிலியர்களுக்கு, உயிர் பிழைக்கவும் முடியாத நிலையில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது. வெறும் 6,000, 7,000, 8,000 என்ற அளவில்தான் தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருப்பவர்கள் என்றால், 10,000 வழங்கப்படுவதாகத் தெரிகிறது; அதுவும் அரிதாகத்தான். மேலும், அவர்களின் பணி நேரம் சட்டப்படியான அளவைவிடவும் அதிகமாக இருப்பதால், மனித உரிமைகளுக்கு எதிராக அவர்கள் வதைக்கப்படுகிறார்கள்.

இந்த ஊதியம், பணியிலுள்ள அந்த செவிலியருக்கு மட்டுமாவது போக்குவரத்துச் செலவு, சாப்பாட்டுச் செலவு, தங்கும் செலவு போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்காவது போதுமா என்றால், போதாது என்பதுதான் வெளிப்படை. மேலும், இந்தப் பணிக்கான பட்டயப் படிப்புக்காகப் பெற்ற கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குக்கூட இந்த ஊதியம் உதவவில்லை. இப்படி, நியாயமான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரிந்தும் அதைப் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்துவருகிறது அரசு. கடந்த 2013-ம் ஆண்டில்,இப்போதிருக்கும் கூலியைவிடவும் குறைவாகவே இருந்தது. அதனால், தமிழகமெங்கும் தனியார் மருத்துவமனைச் செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதன் காரணமாகவே, இப்போதிருக்கும் இந்த ஊதியம் கிடைக்கிறது.