பாரத் சேனா தொண்டர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையின் மீது காவிப்பொடி வீசி அவமதிப்பு செய்யப்பட்டது. அவ்வாறு செய்த பாரத் சேனா தொண்டர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் (வயது 21) என்பவர் நள்ளிரவில் சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையின் மீது காவி சாயம் பூசினார். இது தமிழக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் பல்வேறு பகுதிகளில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியாரின் ஆதரவாளர்கள் மற்றும் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ராகுல் காந்தி, மாயாவதி உள்ளிட்டோரும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி போத்தனூர் காவல் நிலையத்தில் அருண் கிருஷ்ணன் சரணடைந்தார். அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்த சூழலில் சிறையில் உள்ள அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதனை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் அறிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் அருண் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தேசிய அளவில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுவார். சிறையிலிருந்து அடுத்த ஓராண்டுக்கு அருண் கிருஷ்ணன் வெளியே வர முடியாது. பரோல் கிடைக்காது.

மேலும், தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது காவல் துறை சார்பில் பதிவு செய்யப்படும் ஹிஸ்டரி ஷீட் (ரவுடி பட்டியல்) தொடங்க வாய்ப்புள்ளது. இது அருண் கிருஷ்ணன் வாழ்க்கையில் ஒரு பெரும் கரும்புள்ளி வழக்காக மாறியுள்ளது.