நிறுமச் செயலாண்மை பட்டப்படிப்பு

நிறுமங்கள் என்பவை சட்டத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓர் அதிசய உலகமாக பார்க்கப்படுகின்றன. நிறுமங்கள் ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு, வருவாய் ஆதாரங்களை உருவாக்குதல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகின்றன.

நிறுமச் செயலாண்மை பட்டப்படிப்பை பற்றி ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியின் நிறுமச்செயலாண்மை துறையின் உதவி பேராசிரியர் தேவராஜன் தெரிவித்துள்ளதில், உலகமயமாக்கல் வாணிப கொள்கைகளுக்குப் பின் சரக்கு, சேவை, மூலதனம் மற்றும் மனிதவளம் ஆகிய காரணிகளின் தரம் மற்றும் தேவை அதிகரித்ததோடு உலகநாடுகளுக்கு இடையே வணிகப் போட்டியும் கணிசமாக அதிகரித்துள்ளது. இவ்வணிக போட்டியை சமாளிக்கும் பொருட்டு ஒவ்வொரு வணிக நிறுமமும் தங்களிடம் பணியாற்றும் தலைமை அதிகாரிகளிடமும், பணியாளர்களிடமும் பல்வேறு யுக்திகளை அனுதினமும் எதிர்பார்க்கின்றது.

உதாரணமாக நிறுமச் செயலக மேலாண்மை, ரொக்க மேலாண்மை, நிறுமச்சட்டங்கள், வணிகப் போட்டிகளை எதிர் கொள்ளும் திறன், சந்தை தகவல்களை பகிர்தல், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகம் சார்ந்த முடிவு எடுத்தல் ஆகியவை உள்ளடங்கும். மேற்கூறிய அனைத்து திறன்களையும் உள்ளடக்கிய பணியாளர்களை அடையாளம் கண்டு பணியமர்த்துவதும் தொடர்ந்து பணியில் வைத்திருப்பதும் நிறுமங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் மாற்றங்களோடும், சவால்களோடும் இயங்கிக் கொண்டுள்ள வணிக உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பல்கலைக்கழகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் நிறுமச் செயலாண்மை மூன்று ஆண்டு பட்டப்படிப்பு.

மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களையும் நடைமுறை பயிற்சி முறைகளையும் உள்ளடக்கியதோடு அவ்வப்போது அவற்றில் திருத்தங்களை செய்து தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு பல்கலைக்கழகங்களால் புதுபித்து வருகின்ற பட்டப்படிப்பு நிறுமச் செயலாண்மை.

நிறுமச் செயலாண்மை துறையில் இளங்கலை படிப்பு பயின்ற மாணவர்கள் வணிக நிறுமங்களில் அதிகப்படியான வேலை வாய்ப்பை பெறுவதற்கும் சுயவேலை வாய்ப்புகளான நிறுமங்களை நிறுமச்சட்டங்களின் கீழ் பதிவு செய்தல், மூலதன திட்டமிடல், நிறுமன சட்ட ஆலோசகர், வணிக வரி திட்டமிடல் மற்றும் மேலாண்மை, அந்நிய செலவாணி மேலாண்மை, முத்திரை மற்றும் அறிவார்ந்த சொத்து பாதுகாப்பு சேவை, பங்கு சந்தை ஆய்வாளர் மற்றும் வல்லுநர் என சிறந்து விளங்குவதோடு தனிப்பட்ட திறமைகளை வளர்ப்பதற்கும் நிறுமச் செயலாண்மை பட்டப்படிப்பு துணை புரிகிறது.

நிர்வாகம் மற்றும் சுய வேலைவாய்ப்பை பெறக் கூடிய சிறப்புகளை உள்ளடக்கிய நிறுமச் செயலாண்மை பட்டப்படிப்பை கற்பதன் மூலம் மாணவர்கள் வணிக நிறுமன உலகில் ஜாம்பவன்களாக திகழ முடியும்.

நிறுமச் செயலாண்மை பட்டம் பெற்றவர்கள் M.Com(CS), M.Com, M.Com(CA), MBA, MSW மற்றும MCA போன்ற பட்ட மேற்படிப்பில் சேர்ந்து பயில தகுதி உடையவர்கள். மேலும் தொழிற்கல்விகளான ACS, CMA, CA மற்றும் BL போன்ற படிப்புகளிலும் சேர்ந்து பயில தகுதி உடையவர்கள். சவால்களை உள்ளடக்கிய வணிக உலகில் திறமையானவர்களுக்கு என்றும் வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கும் என்பதில் ஐயம் இல்லை. அப்படிபட்ட திறமையானவர்களை உருவாக்குவதில்  நிறுமச் செயலாண்மை பட்டப்படிப்புக்கு மிக முக்கிய பங்கு உண்டு.