மகாராஷ்டிரத்தில் இருந்து கோவைக்கு போலி இபாஸ் மூலம் வரும் சொகுசு பேருந்துகள் சிறைப்பிடிப்பு

கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. மாநில, மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இரவு, பகலாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை மகாராஷ்டிரத்தில் இருந்து 25 பயணிகளுடன் நுழைந்த பேருந்தை நிறுத்தி விசாரித்து, இபாஸை வாங்கி படித்த போது மகாராஷ்டிர முதல் மதுரை வரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு பேருந்துக்கு ராஜஸ்தானில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் வரை இ – பாஸ் எடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து கேரளா செல்ல கொங்கன் வழிப்பாதை பயன்படுத்தப்படாமல் அதிக தூரம் செல்லும் கோவை வழி பாதையைத் தேர்ந்தெடுத்தது எதனால் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்திற்கு வர இ பாஸ் கிடைக்காத காரணத்தினால் சிலர் கேரள மாநிலம் இ பாஸ் பெற்றுக் கொண்டு கேரளா செல்லும் வழியில் உள்ள கோவை மாநகருக்கு ஆட்களைக் கொண்டு வந்து இறக்கி விடுவதாக கூறப்படுகிறது.

மேலும் இதுபோன்ற முறைகேடு பல நாள்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் இருந்து கோவை மாநகரம், கோவை மாநகரில் இருந்து ராஜஸ்தானுக்கு பயணிகள் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை சில ஏஜென்ட்கள் கோவை மாநகரில் செய்து தருவதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

கோவை புறநகரில் இறக்கிவிடும் பயணிகளை இங்குள்ள சில ஏஜென்டுகள் கார் மூலம் நள்ளிரவில் கோவை மாநகருக்குள் அழைத்துச் செல்கின்றனர். இங்குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாமலும் கோவை நீலம்பூர் பகுதியில் இறங்கிய பயணிகளால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பல மாநில எல்லைகளை கடந்து சொகுசுப்பேருந்து எப்படி கோவை வந்தது?

போலி இ – பாஸ் பெற்றது எப்படி? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இபாஸ் கிடைக்காத மாவட்டங்களை தவிர்த்து பக்கத்து மாவட்டங்களுக்கு அனுமதி வாங்கி கொண்டு அவர்கள் வரக்கூடிய இடத்திற்கு பாதியில் இறக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பந்தப்பட்ட பேருந்தை அவிநாசி சாலையில் நிறுத்தக் கூடாது என கூறி வாகனத்தை அப்புறப்படுத்தமாறு கூறிச் சென்றனர்.