தாலுகா அளவில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பு மற்றும் தொற்று பரவலை தடுத்திட தாலுகா அளவில் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவற்றிற்காக மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஜூலை இறுதியில் ஆயிரத்தை கடக்கும் என சுகாதாரத்துறை மதிப்பீட்டிருந்தாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் இதற்கு நேர் மாறாக நான்காயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த பத்து நாட்களுக்குள்ளாக இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில் இருந்து இத்தொற்று தீவிரமடைந்துள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட வசதி படைத்த வெகுசிலரே தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெருவதற்கான கட்டணம் பன்மடங்கு என்பது மிக முக்கியமான காரணமாகும். ஆகவே பெரும்பாலும் மக்கள் அரசின் சிகிச்சையை நம்பியே உள்ளனர்.

இந்நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனை, கொடிசியாவில் மட்டும் தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடு என்பது மட்டும் போதுமானதல்ல. மேலும் எவ்வித தொடர்புமற்ற  நோய்த்தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை செய்ய கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கே வரவேண்டிய தேவை உள்ளது. இதன்காரணமாக இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் அதிகமானோர் பரிசோதனைக்காக வருகின்றனர். இவ்வாறு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருகின்றவர்கள் மருத்துவமனையினுள் அனுமதிக்கப்படாத காரணத்தினால் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதன்காரணமாக நோய்த்தொற்று பரவலாகும் ஆபத்து உள்ளது. இஎஸ்ஐ மருத்துவமனையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் அன்றாடம் கிருமிநாசினி தெளிப்பது போன்ற நடவடிக்கைகளில் மெத்தனம் இருப்பதாக தெரிகிறது. சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி போதிய கவனம் செலுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு மக்களிடம் இருந்து தொடர்ந்து எழுகிறது. இதனை உடனடியாக கலைய வேண்டும். மேலும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவைக்கேற்ப இல்லாததால் பணியில் உள்ளவர்களுக்கு ஓய்வில்லாத நிலை ஏற்படுவதாக தகவல்கள் வருகிறது. மேலும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையால் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருவகிறது.

மருத்துவ பரிசோதனையில் நோய்த்தொற்று கண்டறிந்தவர்களை குறிப்பிட்ட நேரத்தில் அழைத்து வருவதற்கான ஆம்புலன்ஸ் வசதி போதுமானதாக இல்லை என்பதால் நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் பலமணிநேரம் காத்திருப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மனவுழைச்சலை ஏற்படுத்தும். இதேபோல தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொருளாதார வசதியற்ற மக்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது உடனடி  அவசியமாக உள்ளது. கொரோனா மருத்துவ பரிசோதனைகள் மற்றும் நோய்த்தொற்றாளர்களுக்கான சிகிச்சை வசதிகளை தாலுகா அளவில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக புதிய நியமனத்தை செய்வதற்கான உத்தரவை பெற வேண்டுகிறேன்.

இக்காலத்தில் சுகாதாரப்பணி என்பது சவாலானது என்பதையறிந்தும் உணர்வுப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளும் நிரந்திரமற்ற தூய்மைப்பணியாளர்கள் அனைவரையும் நிரந்திர பணியாளர்களாக அறிவிப்பதற்கான பரிந்துரையை தமிழக அரசிடம் பெற வேண்டும், உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்று சுகாதாரத்துறையில் வலுவாக உள்ள நமக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதுகிறேன். இத்தகைய சவால்களை ஒன்றினைந்து எதிர்கொள்ள இக்கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நமது மக்களை பாதுகாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று கடிதத்தில் தெரிவித்துள்ளது.