கோவை ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு கொரோனா..!

கோவை ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் பணியாற்றி வந்த பிரிவு தற்காலிகமாக அடைக்கப்பட்டு, இவருடன் பணியாற்றிய 40 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தவிர கோவை, ராக்கிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நகை தயாரிப்பு நிறுவனத்தில் 1,600 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த வாரம் இங்கு பணியாற்றிய 4 பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகை தயாரிப்பு நிறுவனம் தற்காலிகமாக அடைக்கப்பட்டு, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து மற்ற பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நகை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி அலுவலர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 36 வயது பெண், 35 வயது ஆண், 12, 10 வயது சிறுமிகள், கணபதி காவலர் குடியிருப்பை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர ஏற்கனவே கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் பரிசோதனையில் செல்வபுரம் – 31, பொள்ளாச்சி – 10, கோவைப்புதூர் – 7, தீத்திபாளையம் – 5, கரும்புக்கடை, பீளமேடு தலா 4 பேர் உள்பட 94 ஆண்கள், 71 பெண்கள், 13 பெண்கள் சேர்த்து மொத்தம் 178 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,539 ஆக உயர்ந்துள்ளது.