கோவையில் 139 பேருக்கு கொரோனா..! : ஒருவர் பலி

கோவை, மலுமிச்சம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் 5 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்கள் 5 பேரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்தை தற்காலிகமாக அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை கிணத்துக்கடவு அருகே விதைகள் உள்பட விவசாய இடுபொருள்கள் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்த 4 பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் கிணத்துக்கடவு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்துள்ளனர். இதில் 4 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விதை விற்பனை நிலையத்தை தற்காலிகமாக அடைக்க சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல் புது தில்லியில் இருந்து வந்த வருமான வரித் துறை அதிகாரிக்கு கடந்த வாரம் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவருடன் தொடர்புடைய வருமான வரித் துறை அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல்கட்டமாக இவரின் குடும்ப உறுப்பினர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இவருடன் தொடர்புடைய மேலும் ஒருவருக்கு கோவை ரேஸ்கோர்ஸில் செயல்பட்டு வரும் வருவமான வரித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் 32 வயது ஆண் அலுவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர தொண்டமுத்தூர் காவல் நிலையத்தில் 2 காவலர்கள், சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் ஒரு காவலர் மற்றும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு காவலர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, ராஜவீதியை சேர்ந்த 70 வயது முதியவர் மூச்சுத்திணறலுடன் கடந்த ஜூலை 11 ஆம் தேதி தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தாதல் அரசு மருத்துவமனையிலே சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று(20.7.2020) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் ஆலோசகர், லேப் டெக்னீசியன் இருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர ஆன்னூர் – 4, பெ.நா.பாளையம் – 7, ரத்தினபுரி – 5, ரங்கே கவுடர் வீதி – 6, தெலுங்கு வீதி – 5, பெரிய கடை வீதி, எஸ்.எஸ்.குளம், சாய்பாபா கலானியில் தலா 3 பேர் உள்பட 87 ஆண்கள், 52 பெண்கள் சேர்த்து 139 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,183 ஆக உயர்ந்துள்ளது.