அரசு அலுவலக ஒப்பந்தப் பணிக்கு டெண்டர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் பெருக்குபவர், துப்புரவுப் பணியாளர் மற்றும் இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அளித்திட அரசு அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த ஏஜென்சியினர் விலைப்புள்ளி விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் தமிழ்நாடு அடிப்படைப் பணியில் பெருக்குபவர், துப்புரவுப் பணியாளர், மற்றும் இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வெளி முகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அளித்திட மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரரை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிப்படி பதிவு செய்யப்பட்ட,  அரசு அங்கீகாரம் பெற்ற தகுதி வாய்ந்த ஏஜென்சியினர் முத்திரையிடப்பட்ட உறையில் உரிய விண்ணப்பத்தினை முகமை அங்கீகார நகல், விலைப்புள்ளி விபரங்களுடன் ‘அடிப்படை பணி வெளிமுகமை ஒப்பந்ததாரர் நியமனத்திற்கான ஒப்பந்தபுள்ளி”  என்று உறையின் வெளிப்புறம் தெளிவாகக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறையில் வைக்கப்பட்டுள்ள முத்திரையிடப்பட்ட பெட்டியில் வரும் ஜூலை 24 பிற்பகல் 5.45 மணிக்குள் சேர்க்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.