முயற்சியை தூண்டும் ‘மோசோ’ மூங்கில்

திருவிழாக்களில் மற்றும் தமிழ்த் திரையிசைக் கச்சேரிகளில் முதல் பாடலாக பாடப்படும் பக்திப் பாடல், நம் எல்லோர் காதுகளிலும் ரீங்காரமிடும் டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் கணீர் குரலில் வெளிவந்த…“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே… எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே…”

ஆம், கண்ணனை நினைக்கும் போதெல்லாம் புல்லாங்குழல் தந்த மூங்கிலை மறக்க முடியாது.

1965-ல் வெளிவந்த ‘காட்டுராணி’ திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதி பி.சுசிலா குரலில் “மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே; தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே” என்ற பாடல் இப்போதும் மனதில் இனிக்கும் பாடல். ‘அழகு நிலா’ திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் “மூங்கில் மரக் காட்டினிலே நித்தம் ஒரு நாதம்; முத்தமிடும் தென்றலினால் உண்டாகும் சங்கீதம்”என்ற அர்த்தம் பதிந்த மற்றொரு அழகிய பாடல்.

அண்மையில் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவிஞர் வைரமுத்து எழுதிய “மூங்கில் தோட்டம், மூலிகை வாசம்; நிறைந்த மௌனம், நீ பாடும் கீதம்; பௌர்ணமி நிலவு, பனி விழும் காடு; ஒத்தையடிப்பாதை, உன்கூட பொடி நட; இது போதும் எனக்கு; இது போதுமே, வேறென்ன வேணும்.. நீ போதுமே” என்ற வரிகளைக் கேட்கும்போது கல்லூரிக் காலத்தில் காதலியை கைப்பிடித்து நடந்த கார்கால நினைவுகள் வந்து வந்து மோதும்.

‘சாமுராய்’ திரைப்படத்தில் வரும், “மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே… தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே” அருவியில் நனைவதுபோல் ஆனந்தம் தரும் பாடல்.

இயக்குநர் விசு இயக்கத்தில் ‘பெண்மணி அவள் கண்மணி’ திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் இடம் பெறும் தேக்கடியில் படமாக்கப்பட்ட, வாணிஜெயராமின் குரலில், கேட்கும்போதெல்லாம் கண்களின் ஓரத்தில் ஈரப்படுத்துகிற “மூங்கில் இலைக் காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே வாருங்கள்…” என்கிற பாடல்.

பூக்கள் விடும் தூது திரைப்படத்தில் டி.ராஜேந்தர் எழுதிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில்,“மூங்கில் காற்றோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன், முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்”என்கிற பாடல்.

இப்படி மூங்கில், தமிழ்த் திரைப்படப் பாடல்களில் அழகு கூட்டி ஆராதிக்கப்படுகிறது. 120 அடி உயரம் வளரும் தன்மை கொண்ட மூங்கில் ‘புல்’ வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாம். அதாவது பெரிதாக வளரும் புல் என்று வைத்துக் கொள்ளலாம்.

உலகில் 1000 வகைகளுக்கு மேல் மூங்கில்கள் உள்ளன. அதில் சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா,நேபாளம், பங்களாதேஷ், கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகளின் மலைச்சரிவுகளிலும், மிக வறண்ட பகுதிகளிலும் மூங்கில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகமாக மூங்கில் காடுகள் உள்ளன.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், சேர்வராயன் மலை, கொல்லி மலை, கல்வராயன் மலை, சத்தியமங்கலம் மற்றும் முதுமலைக் காடுகளில் மூங்கில் காணப்படுகிறது. குடிசை வீடுகளில் கூரை அமைக்கவும், மாளிகை கட்டுவதில் சாரம் அமைக்கவும், கை வினைப்பொருட்கள் தயாரிக்கவும், மருத்துவப் பயன்களும் மூங்கிலில் உண்டு. ஆயிரக்கணக்கான மூங்கில் வகைகளில் சீனாவில் அதிகமாக வளரும் “மோசோ” என்ற மூங்கிலுக்கு மட்டும் மதிப்பு அதிகம்.

கரியமில வாயுவை உறிஞ்சுவதிலும், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதிலும், கடினத் தன்மையிலும், தளம் அமைப்பதில் கெட்டித் தன்மையிலும், சுருக்கம் இல்லாமல் இருப்பதிலும் மற்ற எல்லா மூங்கில்களையும்விட “மோசோ” உயர்வானது. ஓக் போன்ற பிற கடினமான மரங்களைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு பலம் வாய்ந்தது இது என மேலாண்மை நிறுவனங்கள் உத்தரவாதம் தருகின்றன. மற்ற எல்லா மூங்கிலையும்விட இந்த மோசோவுக்கு மட்டும் ஏன் இந்த மரியாதை.

மற்ற வகை மூங்கில்கள் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குள் அறுவடைக்குத் தயாராகி வெட்டப்படும். ஆனால் மோசோ வகை மூங்கில் ஐந்து வருடங்களில் சின்ன செடியாகக் கூட கண்ணுக்குத் தெரியாது. அதன் பிறகு மந்திரம் போட்டதுபோல் மளமளவென வளரும். ஆறு வாரத்திற்குள் 90 அடியையும் தாண்டி வளரும். ஆம், முதல் ஐந்து வருடங்கள் பூமிக்குள்  தனது வேர்களை பல மைல் கணக்கு தூரத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பரப்பும், பலமாக மண்ணுக்குள் வேர்களைப் பரப்பி பலப்படுத்திய பிறகு தன்னை யாரென தரணிக்குக் காட்டும். அதனால்தான் அதற்கு அவ்வளவு மரியாதை.

ஒரு செயலில் இறங்குவதற்கு முன் முழுமையாகத் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அதன் பிறகு புறப்பட்டால் மற்றவர்களைவிட உயரத்தில் மட்டுமல்ல, உயர்வாகவும் வளரலாம் என்பதையும் “மோசோ” மூங்கில் நமக்கு உணர்த்துகிறது. இப்போது கேளுங்கள் மூங்கில் பாடல்களை.. இனிதான இசை அழகோடு புதிதாக அர்த்தம் புரியும்.

அன்புடன்,

அ. முகமது ஜியாவுதீன்