தங்க நகை பட்டறைகளை மீண்டும் திறக்க இந்து முன்னணியினர் கோரிக்கை

தங்க நகை பட்டறைகளை மீண்டும் திறக்க கோரி மாவட்ட இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 6 – ஆம் தேதியன்று அசோக்நகர் பகுதியில் தங்க நகை தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தியாகிகுமரன் வீதி, பெரியகடைவீதி, கருப்பகவுண்டர் வீதி, சலிவன்வீதி செட்டிவீதி, ராஜவீதி இடையர்வீதி, தெலுங்கு வீதி போன்ற பகுதிகளில் உள்ள தங்க நகை பட்டறைகளை மறு உத்தரவு வரும் வரை அடைக்க உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். மனுவில், இந்த தொழிலில் 25,000க்கும் மேற்பட்ட நகை பட்டறைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

பலர் குடும்பத்தோடு இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் கடந்த மூன்று மாதமாக ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்த அவர்களுக்கு தற்போது பணிகள் துவங்கியுள்ள நிலையில் மேற்கண்ட உத்தரவால் நகை தொழிலாளர்களின் பல குடும்பங்கள் வறுமையில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும். எனவே அவர்களின் வாழ்வதாரத்தை கவனத்தில் கொண்டு மீண்டும் தங்க நகை பட்டறைகளை சமூக இடைவெளியுடன் அரசின் உத்தரவை பின் பற்றி பணியாற்ற மீண்டும் திறந்து வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.