கேபிஆர் கல்லூரியில் இணைய வழி பொருளாதாரக் கருத்தரங்கம்

கோவை கேபிஆர்  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில்  உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா எனும் தலைப்பில் இணையவழிப் (ஜூம் செயலி வழி) பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கேபிஆர் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி, கல்லூரி முதல்வர் பாலுசாமி, வணிகவியல் துறையின் புலத்தலைவர் பேராசிரியர் குமுதாதேவி, பேராசிரியர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கல்லூரியின் முதல்வர் பேசுகையில், தற்போதைய கொரோனா தொற்றுச் சூழலிலுள்ள உலகப் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்தும் அதைச் சமாளிக்கும் சூழல்கள் குறித்தும் உரையாற்றி வரவேற்புரை வழங்கினார்.

தலைமையுரை ஆற்றிய கேபிஆர் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி பேசுகையில், தற்போதைய சூழலில் உலகளாவிய அளவில் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி ஆகிய இரண்டிலும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கல்வி சார்ந்த பாதிப்பினை இதுபோன்ற இணையவழிக் கருத்தரங்குகள், வகுப்புகள் மூலம் சரிசெய்ய இயலும். அதே போல் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்தும் இந்தியா நிச்சயம் மீண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் செயலர் முனுசாமி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினரும் முன்னணிப் பொருளாதார வல்லுநருமாகிய இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ராஜிவ்குமார், கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக விளக்கினார். தொழில் துறையில் கொரோனா உண்டாக்கியுள்ள தாக்கங்கள் குறித்தும் அதற்குண்டான தீர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார். தொழில் துறையில் ஏற்பட்டுள்ள இயந்திரங்களின் வளர்ச்சி மனித உழைப்பை எவ்வாறு பாதித்துள்ளது என்பது குறித்து விரிவாக விளக்கினார். மேலும் தனியார் துறை வளர்ச்சி, இயற்கை வேளாண்மை எனப் பன்முகத் தளங்களிலும் உரையாற்றினார்.

வணிகவியல் துறையின் புலத்தலைவர் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் என 200- க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றுப் பயனடைந்தனர்.