கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கொடிய விலங்குகள்!

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து மறைந்துள்ளன. அவை நீர் வாழ்வனவாகவும், நிலத்தில் வாழ்வனவாகவும் இருந்தன. கற்பனைக்கு எட்டாத வகையில் பிரமாண்டமான உருவத்துடனும், உயிருக்கு அச்சுறுத்தலாகவும் அவை வாழ்ந்திருக்கின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே அவை பூமியின் பிரளயத்தில் மறைந்துவிட்டன. அத்தகைய விலங்குகளின் மிச்சங்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றின் மிச்சங்களை வைத்து உருவகப்படுத்தும்போது அவற்றின் பிரமாண்டம் நமக்கு தெரியவருகிறது. அத்தகைய கொடூரமான விலங்குகளில் 7 வகையான விலங்குகளை இங்கே நாம் பார்க்கலாம்.

இதன் பெயர் ஹெலிகாப்ரியன். இது ஒரு கொடூரமான விலங்குதான். இதன் பற்கள் தாடைகளில் பொருந்தாது. ஆனால், சக்கர வடிவில் வளர்ந்திருக்கும். அந்த பற்கள் இரையை உண்பதற்காக கீழ்தாடையில் பொருந்தும் என்று கருதப்படுகிறது. பல் சக்கரத்தில் சிக்கிய கரும்பு பிழியப்படுவதைப்போல இந்த விலங்கின் பற்கள் உணவை உண்ணும் என்று சில விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதன் உருவம் எப்படி இருக்கும் என்று உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் இந்த விலங்கின் பற்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பெர்மியன் ட்ரையாஸிக் காலத்தைச் சேர்ந்த, அதாவது சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய விலங்காக இது கருதப்படுகிறது.

 

ஹெலிகாப்ரியனைப் போலவே, எடெஸ்டஸ் எனும் இந்த டினோ ஷார்க்கின் உண்மையான உருவமும் முடிவாகவில்லை. இந்த விலங்கிற்கும் நிரந்தரமான பற்கள் இல்லை. புதிய பற்களையும் ஈறுகளையும் உடனடியாக வளர்த்து, பழைய பற்களையும் ஈறுகளையும் முன்னோக்கி தள்ளி பற்களை வெளியே சுருளாக காட்டும் என்று சில விஞ்ஞானிகள் உருவகப்படுத்தினார்கள். வேறு சிலர் அச்சுறுத்தும் வகையிலான பற்களைக் கொண்டிருக்கும் என்கிறார்கள்…

 

6 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோஸர்கள் அழிந்தபிறகும், டைட்டனோபோவா என்ற கொடூரமான உயிர்க்கொல்லி பாம்பு இருந்தது. 50 அடி நீளமும், சுமார் ஒன்றரை டன் எடையும் கொண்ட இந்த பாம்பு தனது இரையை விழுங்கி செரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது.

 

5 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய துடுப்பு போன்ற கடல் தேள் 46 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலடியில் உலவியிருக்கிறது. பென்டெகோப்டெரஸ் டெகோரஹென்ஸிஸ் என்ற பெயருடைய இந்த தேளின் படிமம் 2015 ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றும் இந்த தேளின் மிச்சமாக உண்ணிகள், சிலந்திகள், கடல் நண்டுகள் வாழ்கின்றன.

 

தட்டாம்பூச்சிகள் எப்போதுமே ஆபத்தில்லாதவை. அவற்றின் இறக்கைகள் இரண்டு அங்குலம் மட்டுமே இருக்கும். ஆனால், தட்டாம்பூச்சியின் மூதாதையான மெகநியூரா என்ற பெரிய தட்டாம்பூச்சியின் இறக்கை வியப்பூட்டுமளவுக்கு இரண்டு அடி பரந்து விரிந்திருக்கும்.

 

36 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலில் இப்படி ஒரு மீன் வாழ்ந்திருக்கிறது. 30 அடி வரை வளரக்கூடிய இது, தனது இனத்தைச் சேர்ந்த மீனைத்தான் உணவாக கொள்ளும். இதன் வாய் கண்ணிமைக்கும் வினாடியில் திறந்து இரையைக் கவ்வி விழுங்கும் வகையில் அமைந்திருந்தது. டன்க்ளியோஸ்டியஸ் என்று பெயரிடப்பட்ட இதுவும் ஒரு ஆபத்தான விலங்காகவே கருதப்படுகிறது.

 

மிகப்பெரிய டைனோசரையே இழுத்து கொல்லும் அளவுக்கு 35 அடி நீளத்துக்கு வளர்ந்த ஆபத்தான முதலையின் படிமம் வட அமெரிக்காவில் கிடைத்துள்ளது. டெய்னோசுச்சுஸ் என்று பெயரிடப்பட்ட இந்த முதலையிடம் கடிபட்ட டைனோசர்களின் படிமங்களும் கிடைத்துள்ளன.