ஸ்மார்ட் சிட்டி பணிகள் இரவிலும் தொடர அனுமதி

கோவையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் இரவிலும் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி என்ற திறன்மிகு நகரமாக கோவையை மாற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  குளக்கரைகள் பலப்படுத்துதல் மற்றும் பூங்காக்கள் அமைத்தல்,  ரேஸ்கோர்ஸ் பகுதியில் மேம்படுத்துதல், மாநகர் பகுதிகளில் காகிதமில்லா பண பரிவர்த்தனையை மேம்படுத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முழுவீச்சில் இப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன, இதனிடையே ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.  இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை இரவிலும் தொடர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் பணிகள் விரைவாக முடிவடைந்து திட்டங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.