24 நாட்களுக்கு பிறகு மீண்டும் நியூசிலாந்தில் கொரோனா தொற்று

நியூசிலாந்தில் கொரோனா இல்லை என்று அறிவித்த 24 நாட்களுக்கு பிறகு மீண்டும் இருவருக்கு தொற்று உறுதி செய்யபடுள்ளது.

நியூசிலாந்தில் பிப்ரவரி மாதம் முதல்முறையாக கொரோனா தொற்று பரவியது. அப்போது முதல் மொத்தம் 1,154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 22 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாகவும்,  புதிய பாதிப்புகள் ஏதுமில்லை எனவும் ஜூன் 8ஆம் தேதியன்று நியூசிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து அனைத்து சமூக, பொருளாதார கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டன. எல்லைக் கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து அமலில் வைக்கப்பட்டன. பொது நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள், சில்லறை வர்த்தகம், உணவகங்கள், ஹோட்டல்கள், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. மேலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்கள் இருவருமே இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்துக்கு திரும்பியவர்கள்.