மஞ்சளின் மருத்துவ குணங்கள் !

இந்திய இல்லங்களில் தினசரி உணவில் மஞ்சள் இல்லாமல் இருக்காது. அது வெறும் மணத்திற்காகவும், நிறத்திற்காகவும் மட்டுமல்ல. அதில் பல நன்மைகள் உள்ளன.

அழற்சி நீக்கி மற்றும் வலி நிவாரணி : மூட்டுகளில் ஏற்படக் கூடிய வலிகளுக்கு மஞ்சள் நல்ல மருந்து. சில ஆராய்ச்சிகளிலும் உடல் அழற்சிகளை நீக்கக் கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

கல்லீரல் ஆற்றல் அதிகரிக்கும் :

மஞ்சள் சிறந்த நச்சு நீக்கி என்பது அனைவரும் அறிந்ததே. நோய்த் தொற்றுகள் உடலைப் பாதிப்பதற்கு முன்னரே இந்த மஞ்சளை அவற்றை நீக்கிவிடும். அதேசமயம் கல்லீரலைப் பாதிக்கக் கூடிய நச்சுகளோடு எதிர்வினையாற்றிப் பாதுகாக்கும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும் :

முன்னோர்கள் காலம் தொட்டே மஞ்சள் ஜீரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆயுர்வேத மருந்து. ஆராய்ச்சிகளில் வயிற்று மந்தம், வாயுத் தொல்லை போன்ற உடல் உபாதைகளையும் போக்கும் எனக் கண்டறிந்துள்ளனர்.

நோய் எதிர்ப்புச் சக்தி :

லிப்போபோலிசாச்சரைட் (Lipopolysaccharide) எனப்படும் நோய்க்கொல்லி இதில் இருப்பதால் அது மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து தொற்றுகளால் ஏற்படக் கூடிய பிரச்னைகளையும் சரி செய்கிறது. இதனால்தான் மருத்துவர்கள் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் கலந்து தினமும் குடிக்கச் சொல்கிறார்கள்.

மூளைக்கு நல்லது :

மஞ்சளில் இருக்கக் கூடிய ஆரோமேட்டிக் டர்மரொன் (Aromatic turmerone) என்னும் கலவை மூளைக்கு மிகவும் நல்லது. மூளையில் உள்ள ஸ்டெம் செல்களை பழுதுபார்த்து அதைச் சரியாக இயங்கச் செய்யும் மெக்கானிக் போன்று செயல்படுகிறது.

இளமையை நீட்டிக்கும் :

முன்னோர்கள் எத்தனை வயதானவர்களாக இருந்தாலும் அவர்களின் முகம் இளமையாகவே இருக்கும். காரணம் அவர்கள் முகம் முழுவதும் தினமும் மஞ்சள் பூசுவார்கள். அதேபோல் இன்றைய ஸ்கின் கேர் பொருட்களிலும் மஞ்சள் சேர்க்கப்பட்டது என பிரத்தியேகமாக விளம்பரங்களில் ஹைலைட் செய்கின்றனர். இப்படி மஞ்சள் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ளவும், பொலிவுடனும் இருக்க உதவுகிறது.

உடல் எடையைக் குறைக்க உதவும் :

மன அழுத்தத்தின் போது சுரக்கக்கூடிய ஹார்மோன் திடீர் உடல் எடைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைச் சமநிலைப்படுத்த மஞ்சள் கருவியாகப் பயன்படுகிறது. கொழுப்புக் காரணிகளையும் எரித்துவிடும்.

இப்படி மஞ்சளின் மகிமையைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதுபோன்ற பல காரணங்களால்தான் முன்னோர்கள் தொட்டு இன்று வரை மஞ்சளைச் சமையலுக்குக் கட்டாயப் பொருளாகச் சேர்க்கின்றனர்.