நிரந்தர `வொர்க் ஃப்ரம் ஹோம்’ கடும் பதிப்பை ஏற்படுத்தும்

– சத்ய நாதெள்ளா

கொரோனா காலத்தில் அதிகப்படியானோர் பயன்படுத்துகிற  வார்த்தை `வொர்க் ஃப்ரம் ஹோம்’. இந்த `வொர்க் ஃப்ரம் ஹோம்’ வேலைமுறையை பல நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் தங்களது ஊழியர்கள் இனி நிரந்தரமாக வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் எனச் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அப்படிச் செய்தால் ஊழியர்கள் மனதளவில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சத்ய நாதெள்ளா தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவின் தீவிரம் தினமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்தச் சூழலில் ஃபேஸ்புக், கூகுள் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்களது பணியாளர்கள் இந்த வருட இறுதி வரை வீட்டிலிருந்து பணி செய்யலாம் எனத் தெரிவித்திருந்தனர்.

ஆனால், ட்விட்டர் நிறுவனமோ சற்று அகலக் கால் வைத்து, `இனி பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை; பணிக்காலம் முழுவதும் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டுமென்றாலும் செய்யலாம்” என்று கருத்து தெரிவித்துள்ளது.

ட்விட்டரின் CEO ஜாக் டார்ஸி நிர்வகிக்கும் மற்றொரு நிறுவனமான Square ஊழியர்களுக்கும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுபோன்று `வொர்க் ஃப்ரம் ஹோம்’ நிரந்தரமாக்குவது சில காலம் கழித்து ஊழியர்களின் மனநலனைப் பாதிக்கலாம். இதனால் பணியிடங்களில் பிறருடன் பழகுவது, ஒற்றுமையாக வேலை செய்வது போன்ற சமூகத் தொடர்பு விஷயங்களிலிருந்து விலகி பெரும் சிக்கல்கள் உண்டாக்கும். நேரில் சந்திக்கும் கூட்டங்களில் இருக்கும் உத்வேகம் எப்பொழுதும் வீடியோ கால்களால் கொடுத்துவிட முடியாது. இது கடும் பிரச்னைகளை பிற்காலத்தில் உண்டாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.