ஓய்வில்லாமல் உழைக்கும் நாயகன்

கொரோனா – தடுப்புப் பணிகள் ஓர் பார்வை

கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டு ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் குவியல், குவியலாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகில் இன்னும் பல நாடுகளும் இந்த வைரஸால் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு இந்தியாவும் தப்ப முடியவில்லை. மற்ற நாடுகளுக்கு ஒருவகை சிக்கல் என்றால் இந்தியாவுக்கு கூடுதலாக பொருளாதாரம் பாதிக்கப்படுவது ஒரு பெரிய சவால் என்றாலும் கிட்டத்தட்ட 40 நாட்கள் ஊரடங்கு விதித்து ஓரளவு சிக்கலைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும். இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பது பெறும் ஆறுதலைத் தரும் செய்தி.

இந்திய அளவில் பார்த்தால் தொடக்கத்தில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு என்று பட்டியல் தொடங்கி பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருந்தார்கள். மூன்றாம் இடத்திலிருந்த தமிழ்நாடு, தன்னுடைய நிர்வாகம், நோய்த் தடுப்பு முறைகளால் இன்று ஒரு சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு கொரோனா வைரஸ் பரவலை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில்தான் அதிகம் பேர் பாதிப்புக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கு அடுத்ததாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. அதிலும் கோவை மாவட்டம் கேரள எல்லைப் பகுதி, விமான நிலையம் வெளிமாநிலத் தொழிலாளர் என்று பலவும் கொண்டிருப்பதால் இங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் திறம்பட செய்வது அவசியமாகிறது.

கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்க்கும்போது இதற்கு பின்புலமாக இருக்கும் தூய்மைப் பணியாளர் தொடங்கி சுகாதாரம், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவர், செவிலியர், உதவியாளர் என இதில் ஈடுபட்டுள்ள அனைவருமே நமது பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் என்று சொல்வார்களே, அப்படி உண்மையிலேயே செயல்பட்டுவரும் இவர்கள் என்றும் நம் வணக்கத்துக்கு உரியவர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இப்பணிகளை எல்லாம் ஒருங்கிணைத்து வழிநடத்தி வரும் மாண்புமிகு அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்களையும் இங்கு நினைவுகூற வேண்டியது நம் கடமை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழக அளவில் மூத்த அமைச்சர் என்ற முறையிலும், மேற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையிலும் அவர் பம்பரம்போல் சுழன்று பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் இப்பகுதியில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு என மூன்று மாவட்டங்களுமே கொரோனா வைரஸ் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டவையாக ‘ரெட் அலர்ட்’ குறியீட்டுக்குள் இருப்பதால் இங்கு பணிச்சுமை அதிகம்.

மற்ற மாவட்டங்களுக்கு ஒரு சிக்கல் என்றால் இங்கு கூடவே வேறு வகையான கூடுதல் சிக்கலும் உள்ளது. தொழில் நகரமான கோவை, ஏற்றுமதி நகரமான திருப்பூர் என்று இப்பகுதிகள் முழுவதும் பல்வேறு வகையான ஏராளமான சிறு, குறு, பெரும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் உள்ள சிக்கல்களும் ஏராளம். அந்த வகையில் கூடவே இதையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருவதில் அவருக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத் தொழில் துறையினருடன் அமைச்சருக்கு எப்போதுமே ஒரு நல்லுறவு உண்டு. அதனால் இதுகுறித்த தெளிவான பார்வையும், புரிதலும் உள்ளவர் அந்த வகையில் தொழில்துறை சார்ந்தவர்கள், ஆட்சிப் பணியில் உள்ளவர்கள், தன்னார்வலர்கள், மருத்துவத் துறையினர் என அனைவரையும் ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டு வருவதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது.

இதுபோக புதிய நடவடிக்கைகளாக பல யுத்திகளைக் கையாண்டு பார்ப்பதிலும் அவரே முன் நிற்கிறார். எடுத்துக்காட்டாக சென்னையில் அம்மா உணவகம் இலவச உணவு வழங்குவதற்கு பல நாள் முன்பே கோவையில் ‘இந்த முறை’ செயல்படத் தொடங்கியது என்றால் அதற்கு காரணம் அமைச்சர்தான் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அந்த வகையில் தொடர்ந்து எழும் சிக்கல்களுக்கு எல்லாம் நடைமுறை தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே இதுகுறித்து பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தி பல பணிகளையும் முடுக்கி விட்டார். விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒருபுறம், தனியாக இஎஸ்ஐ மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியது நோய் தடுப்பு நடவடிக்கைகள் மறுபுறம் என்று படிப்படியாக பல்வேறு பலவும் செயல்பட வழிகாட்டி வருகிறார்.

பொதுவாகவே செயல் வேகம் மிக்க அமைச்சரான திரு. எஸ்.பி.வேலுமணி, இந்த அசாதாரண காலகட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. அவருடைய நீண்ட அரசியல் அனுபவமும் மக்களுடன் இணைந்து பணியாற்றும் தன்மையும் சேர்ந்து அவருக்கு உதவி வருகின்றன. அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி ஆட்சியர் அலுவலகம், கோவிட் மருத்துவமனை என்று பல தளங்களிலும் ஆராய்ந்து பணிபுரிந்து வரும் இவரைப் போன்றோர்தான் இந்த காலகட்டத்தில் தேவை. இந்த கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அதனைப் புரிந்துகொண்டு மக்களுக்காகக் கடமையாற்றி வரும் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகவே அமையும்.