தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய மளிகைப் பொருட்களை

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரியை சேர்ந்த கொரோனா பாதித்த 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் நூறு தூய்மை பணியாளர்களுக்கு சி ஆர் ஐ நிறுவனம் வழங்கிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் ராசாமணி, கோவை மாவட்டத்தில் 141 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். கொரோனா பாதித்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும், கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் உள்ள 16 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். சமூக பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும், அத்தியாவசிய காரணங்களுக்காக வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் அநாவசியமாக வருபவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கோவை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.