ஜி20 மாநாடு..?

ஜி-20 அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி ஆதாரங்களின் அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்த ஒரு பொருளியல் கூட்டமைப்பே ஜி-20. இதன் நோக்கம், உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை ஒன்றிணைக்கும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டது.
மொத்த உலக உற்பத்தியில் 85% வும், உலக வணிகத்தில் 80% வும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் இவ்வமைப்பு கொண்டுள்ளது. இதன் உச்சி மாநாடுகளில் ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்வர். 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இதன் முதல் உச்சி மாநாடு 2008 ஆம் ஆண்டில் வாஷிங்கடனில் நடைபெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்றது.
ஆனால், உலகளாவிய கொரோனா பாதிப்பு காரணமாகவும், இக்கூட்டமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகளான சீனாவும், அமெரிக்காவும் கொரோனா பாதிப்பு குறித்து ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு இருப்பதாலும் இன்று நடைபெற்று இருக்க வேண்டிய 15 ஆவது உச்சி மாநாடு நடைபெறவில்லை.
இருப்பினும், இக்கூட்டமைப்பின் மாநாடு வரும் நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. முதன்முறையாக சவுதி அரேபியாவில் நடைபெறும் இம்மாநாட்டின் நோக்கமாக, ‘21 ஆம் நூற்றாண்டில் அனைவருக்குமான வாய்ப்புகள்’ என்பதாக உள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரம் கொரோனாவால் கீழ் நோக்கிப் போகும் நிலையில் இம்மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தது, தனித்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.