ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கிருமி நாசினி இயந்திரம்

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கிருமி நாசினி ஸ்பிரேயர் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான உழவர் சந்தை, மார்க்கெட் பகுதிகளில் நவீன தானியிங்கி கிருமி நாசினி இயந்திரம் அரசு மற்றும் ஈ.ஓ அமைப்பின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியூர் செல்வதற்கான அனுமதி சீட்டு பெறுவதெற்கென பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் என்டர்பிரனெர்ஸ் அசோசியேசன் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவில் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார். இதன் வழியாக உள்ளே நுழையும் போது இயந்திரத்தின் மேலே பொருத்தப்பட்டுள்ள ஸ்பிரேயரில் இருந்து வரும் கிருமி நாசினி மக்கள் மீது தெளிக்கும். இதற்காக அருகில், பாரல்களில் கிருமி நாசினி மருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மின் மோட்டார் மூலம் ஸ்பிரேயருக்கு மருந்து செல்லும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதன் வழியாக பொதுமக்கள் செல்லும் போது கிருமி நாசினி தெளிக்கப்படுவதால் நோய் பரவாமல் தடுக்க இந்த இயந்திரம் ஏதுவாக இருக்கும் என இதனை நிறுவிய  ஈ.ஓ  அமைப்பின் தலைவர் ரஜினி காந்த் தெரிவித்தார். இதன் ஒருங்கிணைப்பில் அமைப்பின் நிர்வாகிகள் பிரகாஷ், அனீஷ், பென் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.