பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர்கள் ?

கொரோனா அச்சம் தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. முன்னதாக படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பெப்சி தொழிலாளர்களின் நிலையை எடுத்துரைத்தும், அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் நடிகர், நடிகைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. இதில் நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் நிதியை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் 250 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலா 10 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். இவை அனைத்துமே 25 கிலோ எடை கொண்டதாகும்.

நடிகர் சிவகார்த்திகேயன் பெப்சி அமைப்புக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும் தன் பங்கிற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும்,விரைவில் இதர நடிகர்களும் நிதியுதவி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Source – The Hindu