கே.ஜி மருத்துவமனையில் முதல்முறையாக ‘லைவ்’ கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

 

கே.ஜி மருத்துவமனையில் முதல்முறையாக ‘லைவ்’ கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் மகளுக்கு தந்தை கல்லீரல் தானமாக வழங்கி மறுவாழ்வு அளித்தார்.

கள்ளக்குறிச்சியை  சேர்ந்தவர் ரவி (45). கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி சோலையம்மாள். இத்தம்பதிக்கு கலையரசி (21), தமிழரசி (20), இளவரசி (15) என மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில், இரண்டாவது மகள் தமிழரசிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், இவரது உடலில் கை, கால், முகத்தில் வீக்கம் ஏற்பட்டு, மஞ்சள் காமாலை நோயும் உருவானது. சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தபோது கல்லீரல் கெட்டுப்போய்விட்டது எனக்கூறினர்.

இதையடுத்து, தமிழரசி கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கோவை கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் மருத்துவ குழுவினர் அவரது உடலை பரிசோதித்தபோது, யாராவது கல்லீரல் தானம் செய்தால், இப்பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியும் என தெரியவந்தது. மருத்துவர் ஆலோசனையின்படி, இப்பெண்ணின் தந்தை ரவி, தனது உடலில் உள்ள கல்லீரலில் பாதி அளவை தானம் செய்ய முன்வந்தார்.

இதையடுத்து, சென்னையில் இருந்து பிரபல கல்லீரல் மாற்று ஆபரேஷன் நிபுணர் டாக்டர் கார்த்திக் மதிவாணன் வரவழைக்கப்பட்டு, அவரது தலைமையில், கே.ஜி மருத்துவ குழு அதிரடியாக களத்தில் இறங்கியது. இந்த குழுவில், டாக்டர்கள் ஜகாங்கீர், விவேகா, சபரீஷ், அனுஷா, சுஜித்குமார், செந்தில், பிரகாஷ் மற்றும் நர்சுகள், ஊழியர்கள் என 100 பேர் இடம்பெற்றனர். இக்குழுவினர், தொடர்ச்சியாக 24 மணி நேரம் இந்த ஆபரேஷனை செய்தனர். அதாவது, உயிரோடு இருக்கும் தந்தையின் உடலில் இருந்து பாதி அளவு கல்லீரலை வெட்டி எடுத்து, உயிரோடு இருக்கும் மகளின் கல்லீரலை அகற்றிவிட்டு, அதில் கச்சிதமாக பொருத்தும் இந்த சிக்கலான ஆபரேஷனை (லைவ் சர்ஜரி) வெற்றிகரமாக செய்தனர். தற்போது, தந்தை-மகள் இருவரும் நலமாக உள்ளனர். இந்த சிக்கலான ஆபரேஷன் செய்த டாக்டர் கார்த்திக் மதிவாணன் குழுவுக்கும், கல்லீரல் தானம் செய்த தொழிலாளி ரவிக்கும் பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.

இதுபற்றி கே.ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் பேசுகையில், இந்த பெண்ணுக்கு பிறவிலேயே கல்லீரலில் காப்பர் சத்து தங்கிவிட்டதால், நாள்பட கல்லீரல் கெட்டுவிட்டது. இது, ரொம்ப அரிதான நோய். 19-20 வயதில்தான் இந்த பாதிப்பு தெரியவரும். சரியான நேரத்தில் முடிவுவெடுத்து, தந்தையிடமிருந்து பாதி அளவு கல்லீரல் தானமாக பெற்று, மகளுக்கு வெற்றிகரமாக பொருத்தியதால் இருவரும் உயிர்பிழைத்தனர். வெளிநாடுகளில் இவ்வகை ஆபரேஷன் செய்ய ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி வரை செலவாகும். சென்னையில் ரூ.30 லட்சம் செலவாகும். ஆனால், கே.ஜி.யில் ரூ.16 லட்சத்தில் இந்த ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அதுவும், தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் செய்யப்பட்டுள்ளது. தமிழரசி குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதால், இலவசமாக இந்த ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, மூளைச்சாவு அடைந்த நபரின் உடலில் இருந்து உறுப்புகளை அகற்றி, இன்னொரு நபருக்கு பொருத்தி பிழைக்க வைப்பது எளிது. ஆனால், உயிரோடு இருக்கும் ஒரு நபரின் உடல் உறுப்பை பாதி அளவு வெட்டி எடுத்து, உயிரோடு இருக்கும் இன்னொரு நபரின் உடலில் பொருத்துவது என்பது மிக சவாலான ஆபரேஷன். இது, கே.ஜி மருத்துவமனையில் முதல்முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது, பெருமை அளிக்கிறது என்றார்