சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள்…

இராஜாஜியைப்போல சாணக்கியரோ, மூதறிஞரோ இல்லை; பேரறிஞர் அண்ணாவைப்போல பெரிய பேச்சாளர் இல்லை. கலைஞர் கருணாநிதியைப்போல எழுத்தாளர், பேச்சாளர் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவைப்போல மக்களைக் கவர்ந்த வசீகரத் தலைவர் இல்லை. சொல்லப்போனால் மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை எடப்பாடி என்ற ஊர் எங்கே இருக்கிறது என்பதே பெரும்பாலான தமிழக மக்களுக்குத் தெரியாது என்றே கூற வேண்டும். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். முதலில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

அவருக்கு அரசியல் தெரியாது, மற்றவர்களின் கைப்பாவை, அவர் பிரபலமானவர் இல்லை என்பது போன்ற பல கருத்துகளைத் தவிடுபொடியாக்கி மூன்றாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் என்பதுதான் தற்போதைய நிதர்சனம்.

அவருடைய கடந்த மூன்றாண்டு ஆட்சிக்காலம் என்பது என்பது ஏதோ தென்றல் உலாவும் சோலையாக இருந்திடவில்லை. ஜல்லிக்கட்டு தொடங்கி, நீட் தேர்வு, தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலை என்று பல சிக்கல்கள் வந்துகொண்டே இருந்தன. கன்னியாகுமரி வெள்ளம், கஜா புயல் எல்லாம் வந்தபோது மக்களை நேரில் சந்திக்கவில்லை என்ற பலமான குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. ஆனால் பழனிச்சாமி இதற்கெல்லாம் கலங்கிய மாதிரியே தெரியவில்லை.

அவருடைய அமைச்சரவைக்கு பெரும்பான்மை குறித்த சட்டச்சிக்கலை உருவாக்கும் வகையில் ஒரு வழக்குகூட தொடரப்பட்டது. அதுபோக எதிர்க்கட்சிகள் அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டே வந்தன. பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய கட்சி பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதெல்லாம்போக அவர்களின் கட்சியில் இருந்தே பிளவுபட்ட ஒரு அணி மற்றும் அதனைச் சார்ந்தவர்கள் என்று உட்கட்சி பிரச்னை ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.

ஆனால் அத்தனை சிக்கல்களையும் சிரித்த முகத்துடன் எதிர்கொண்டவராகவே அவர் காணப்படுகிறார். கடந்த சில பத்தாண்டுகளில் ஆட்சிக்கு வந்த தமிழக  முதலமைச்சர்களிலேயே எளிமையானவராகவும், அணுக முடியும் என்ற நம்பிக்கையைத் தருபவராகவும் இருக்கிறார். ஒரு விவசாயியின் வெள்ளந்தி சிரிப்பும், யதார்த்தமான பேச்சும் அவரை சாதாரண மக்களுக்கு அணுக்கமானவராகவே காட்டுகிறது.

அதையெல்லாம் பார்த்துவிட்டு அவருக்கு அரசியல் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. அவர் நேரடியாக தேர்தலைச் சந்தித்து முதலமைச்சர் ஆனவர் இல்லைதான். ஆனால் இந்தியாவில் மிகப்பெரிய தேசிய கட்சிகள் உள்பட ஆட்சி என்பதற்கு தேவையான நம்பர் விளையாட்டில் பல இடங்களில் அடி வாங்கித் தோற்று விலகும் நிலை வந்திருக்கிறது. ஆனால் இவர் கதையே வேறு. ‘சொன்னாலும் புரியாது.. மண்ணாளும் வித்தைகள்’ என்பதுபோல சிரித்த முகத்துடன் எல்லா சுற்றுகளையும் கடந்து மூன்றாண்டுகளை இவர் நிறைவு செய்திருப்பது பெரிய விஷயம்தான்.

அதைப்போலவே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கிறது, தமிழகத்தின் நலன்களை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஒருபுறம் எதிர்க்கட்சிகள் வலுவாக வைத்து வருகின்றன. ஆனால் அவற்றையும் சரியாக எதிர்கொள்வதில் இவர் பின்தங்கியவராகத் தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக, தமிழக விவசாயிகளின் நலன்களைக் காப்பதில் அதிலும் குறிப்பாக மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று பலவும் சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்திருப்பது பொருளாதார, விவசாய வளர்ச்சி மற்றும் நலன்களையெல்லாம் தாண்டி ஒரு அற்புதமான அரசியல் காய் நகர்த்தல் என அரசியல் வல்லநர்கள் கூறுகிறார்கள். அதைப்போலவே குடியுரிமை குறித்த சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களைப் பற்றி பேசும்போது சட்டசபையில் நேரடியாக அதுகுறித்து விளக்கம் தந்தது ஆகியன அவரை சாதாரண அரசியல்வாதி என்பதனைத் தாண்டி இன்னும் உயரத்தில் கொண்டுபோய் நிறுத்துகின்றன.

அரசியல் என்பது ஒரு களம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல சுற்றுகளாக மோதல்கள் நிகழும். யார் என்ன சொன்னாலும் இந்த ரவுண்டு வரை தமிழக அரசியல் களத்தில் எடப்பாடி பழனிச்சாமிதான் வெற்றியாளர். அவர் பாரம்பரிய திறமைகள் இல்லாதவராக இருக்கலாம். மனதை மயக்கம் பேச்சாளராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் செயல்திறன் உள்ளவராகவே இருக்கிறார் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு பெரிய சிக்கல்கள் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் அவருடைய ஆட்சிப்பணியை கவனித்து வருவதே அவருடைய அரசியல் அணுகுமுறையாக இருக்கிறது. அது வெற்றியையும் தந்து வருகிறது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தல் வரும்போது அவருடைய முழு தேர்தலை எதிர்கொள்ளும் இன்னொரு திறனும் மதிப்பீடு செய்யப்பட்டு விடும். அதுவரை காத்திருப்போம். மத்திய அரசின் நல் ஆளுமைத்திறனுக்கான விருது, வெளிநாட்டு முதலீடு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, பதினொரு மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், அவிநாசி அத்திக்கடவு கூட்டுக்குடிநீர்த் திட்டம் போன்ற திட்டங்கள் உருவாக்கப்பெற்ற கடந்த மூன்றாண்டுகளுக்காக அவரை வாழ்த்துவோம்.