அம்மணியம்மாள் பள்ளியில் அரசு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் விலையில்லா வினா விடை புத்தகங்கள் வழங்கும் விழாவினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து, மிதிவண்டிகள் மற்றும் வினா விடை புத்தகங்களை வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமை வகித்தார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவியர்கள் 232 பேருக்கும், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவியர்கள் 184 பேருக்கும், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் 84 பேருக்கும், மொத்தம் ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 500 விலையில்லா மிதிவண்டிகளையும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 700 பேருக்கும், 12-ம் வகுப்பு மாணவர்கள் 632 பேருக்கும், மொத்தம் 1332 பேருக்கு விலையில்லா வினா விடை புத்தகங்களையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாநகராட்சி கல்வி அலுவலர் வள்ளியம்மாள், மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்அரசன், உதவி தலைமையாசிரியர் சதீஸ், மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.