“வேற்றுமையில் ஒற்றுமை என கொண்டாடிய பாரத் உற்சவ் 2020”

கோவை அனைத்து கலாச்சார அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள பாரத் கலா சங்கமம் அமைப்பின் முதல் நிகழ்வு ‘பாரத் உத்சவ் 2020’ குடியரசு தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று கிக்கானி அரங்கில் நடைபெற்றது.

துவக்கவிழாவில் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினெட் ஜெர்னல் பி.எம்.ஹரீஷ், பாரத் கலா சங்கமம் அமைப்பின் தலைவரும் கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எம்.கிருஷ்ணன், பாரத் உற்சவ் 2020”  தலைவர் டாக்டர்.சுரேஷ் பிரபு, பொறுப்பாளர்கள் கிருஷ்ண கோபால், கே.கே.சுக், கே.ஜனார்த்தனன் மற்றும் பாரத் கலா சங்கமத்தில் இணைந்துள்ள அனைத்து சங்கங்களின் பிரதிநிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வழங்கியது.

நிகழ்ச்சியில் லாவண்யா சங்கரின் அப்பியாசா நடனக் குழுவினரின் பரதநாட்டியத்துடன் துவங்கியது. மகாகவி பாரதி எழுதிய பாரத சமுதாயம் வாழ்கவே என்ற பாடலுக்கு மாணவிகள் நடனமாடினர். பாரத் உற்சவ் நிகழ்வின் மையக்கருத்து இந்தியாவின் பண்டிகைகள் என்பதாக இருந்தது. கர்நாடக அசோசியேசன் குழுவினர் துளசி சங்கீர்த்தன பஜனையை நிகழ்த்தினர். கர்நாடக மாநிலத்தின் புகழ் மிக்கப் பண்டிகையான துளசி சங்கீர்த்தனம் கார்த்திகை மாதத்தில் தீபாவளிக்கு அடுத்த பனிராண்டாவது நாள் மாநிலம் முழுக்க கொண்டாடப்படுகிறது. அடுத்த நிகழ்வாக பஞ்சாப் மாநிலத்தின் புகழ்மிக்க திருவிழாக்களில் ஒன்றான பைசாகி திருவிழா நிகழ்த்தப்பட்டது. குரு கோவிந்த சிங்கின் போர் வீரர்களின் தீரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் நடனம் அமைந்தது. ஏப்ரல் மாதத்தில் நிகழும் அறுவடைத் திருவிழா இது. தொடர்ந்து சிந்தி பெடரேஷன் அமைப்பின் சார்பாக நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தின் இறுதியில் புகழ்மிக்க நாட்டாரியல் சுஃபி பாடலான நூரான் சகோதரிகளின் தமாடம் மஸ்து கலந்தர் பாடலுக்கு அனைவரும் சுழன்று ஆடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

ராஜஸ்தானி அசோசியேசன், ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு நாட்டாரியல் கலை வடிவங்களையும் வண்ணமிகு நடனங்களாக நிகழ்த்திக் காட்டினார்கள். கொங்கணி சமாஜ் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மகாபாரதக் காட்சிகளுக்கு நடனமாடினர். நாடகத்தின் இறுதியில் இந்து மதத்தின் அனைத்து தெய்வங்களும் மேடையில் தோன்றியது காண்போரின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்தது. தமிழ் அசோசியேசன் சார்பில் மகாகவி பாரதியார் எழுதி கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்ற திருச்சி லோகநாதன் பாடிய வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம் என்கின்ற பாடலுக்கு மாணவிகள் பரதநாட்டிய நடனம் ஆடினர். அதனைத் தொடர்ந்து பஞ்சாபி அசோசியேஷன் பஞ்சாபில் கொண்டாடப்படும் லாகிரிப் பொங்கலை மேடையில் நிகழ்த்திக் காட்டினர். மூத்தோர் முன்னிலையில் இளம் தலைமுறையினர் ஆடிப்பாடி பொங்கல் கொண்டாடி ஆசி பெற்றது இந்தியக் குடும்பங்களின் பண்பாட்டுச் செழுமையை பறைசாற்றுவதாக இருந்தது. கோவை மலையாளி அசோசியேஷன் சார்ந்தவர்கள் மோகினியாட்டம், கதகளி உள்ளிட்ட தொன்ம கலைவடிவங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். இறுதியாக உலக தெலுங்கு கூட்டமைப்பின் வழங்கிய தெலுங்கு பொம்மலாட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.