கம்பனுக்கு முன்பே ராமனைப் பாடியவர் குலசேகர ஆழ்வார்!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் ‘எப்போ வருவாரோ’ ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஆறாம் நாளில் புலவர் சந்திரசேகர் குலசேகர ஆழ்வார் குறித்து உரையாற்றினார்.

வைகுண்ட ஏகாதசி நாளான இன்று ராமனின் நாமத்தைப் பாடிய குலசேகர ஆழ்வாரின் பெருமைகளைப் பேசுவது பொருத்தமுடையது. கம்பனுக்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் குலசேகர ஆழ்வார். வால்மீகி எழுதிய ராமாயணத்தை கம்பன் தமிழில் எழுதுவதற்கு முன்பே பாடியவர் குலசேகர ஆழ்வார்.

கம்பன் தன் ராமாயணத்தை பட்டாபிஷேகத்துடன் முடித்துக்கொண்டார். வால்மீகி பாடிய உத்தர காண்டத்தை கம்பர் தவிர்த்துவிட்டார். ஆனால், அதையும் சேர்த்துப் பாடியவர் குலசேகர ஆழ்வார். கௌஸ்துபம் எனப்படும் திருமால் மார்பில் அணிந்துள்ள ஒருவகை ஆபரணத்தின் அம்சமாக குலசேகர ஆழ்வார் கருதப்படுகிறார்.

சேர மன்னனான இவர் கொல்லி நகரை தலைநகராகக் கொண்டு சிறப்பான ஆட்சியை செய்து வந்தார். பாகவதர்கள் ராமாயண கதை சொல்வதைக் கேட்டு உணர்ச்சிவசப்படுகிற அளவிற்கு பக்தியுடையவர். ஒருமுறை பாகவதர்கள் ராவண வதத்தைப் பாட அதை கண்ணால் காண தன் குதிரையை எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு ஓடினார் குலசேகர மன்னன். அவரது உணர்ச்சிமிக்க பக்தியை கண்டு அவருக்கு ராமன் காட்சி தந்தார்.

குலசேகர மன்னனின் ஆட்சியில் அரண்மனையில் ராம கதைகளைப் பாடும் பாகவதர்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. அதைக்கண்டு எரிச்சல் கொண்ட சில அமைச்சர்கள் அவர்கள் மீது பழி ஏற்படும் விதமாக பெருமாளுக்குச் சூட்டுகிற முத்துமாலையை ஒளித்து வைத்தனர். பழியை பாகவதர்கள் மீது சூட்டினர். குலசேகர மன்னன் கருநாகத்தை ஒரு குடத்தில் இட்டு இந்தத் திருட்டை பாகவதர்கள் செய்திருந்தால், இந்தப் பாம்பு என்னுடைய கரங்களை கொத்தட்டும் எனத் துணிந்து தன் கைகளை உள்ளே விட்டார். குலசேகர அண்ணனை பாம்பு கடிக்கவில்லை.

அமைச்சர்களின் செயலால் மனம் நொந்த குலசேகர மன்னன் அரச பதவியைத் துறந்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். அங்கு அவர் பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படுகிறது. வைஷ்ணவ இலக்கியங்களில் பக்தி ரசத்திற்கும், இலக்கிய நயத்திற்கும், சொற்களின் கூறுமுறையாலும் தனித்துவமிக்க இடத்தை குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் பெற்றுள்ளன. இலக்கியப் பங்களிப்பு மட்டுமல்லாமல் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகளையும் செய்தவர் குலசேகர ஆழ்வார் என்றார்.

நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன், பேச்சாளர் மரபின்மைந்தன் முத்தையா, எழுத்தாளர் கனக துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.