சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா

மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் சவ்ரா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருட்தந்தை ஆன்சன் பெனன்காடென் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

குழந்தை ஏசு பிறப்பினைச் சித்தரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏசு கிருஸ்துவைப் போற்றும் வகையில் பாடல்கள் இசைக்கப்பட்டன. ‘கிறிஸ்துமஸ் திருநாள்’ நாடகம் மற்றும் மழலையர் பள்ளிச் சிறார்களின் கண்கவர் நடனம் ஆகியவை இடம் பெற்றன. ஏசு கிறிஸ்துவின் பிறப்பினைக் கொண்டாடும் வகையில் ‘கிறிஸ்துமஸ் தாத்தாவின்’ வருகை அறங்கிலுள்ளோரை மகிழ்ச்சியடையச் செய்தது.

மாணவர்கள் இளமைப் பருவத்தில் தனது ஆசிரியர்களின் பாதம் பணிந்து தங்கள் பெற வேண்டிய அறிவில் நான்கில் ஒரு பங்கு அறிவினைப் பெறுகிறார்கள். இரண்டாம் பங்கினைத் தங்களின் முயற்சியினால் பெற்றுகொள்கின்றார்கள். மூன்றாம் பங்கினைத் தங்களுக்குக் கிடைக்கின்ற நல்ல நண்பர்களிடமிருந்து பெற்றுகொள்கிறார்கள். நான்காம் பகுதியினைத் தங்களின் வளர்ச்சி காலத்தில் பெறுகிறார்கள் என்பது நம் முன்னோர் மொழி.

அறிவினை பெறுவதுடன் அதனை நல்ல வழியில் பயன்படுத்துவதுதான் விழாக்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. கிறிஸ்துமஸ் விழா உலகில் இருக்கின்ற ஆதரவற்ற வசதி வாய்ப்பற்ற மக்களுக்கு உதவுகின்ற நல்லெண்ணத்தை மக்களுக்கு உணர்த்தும் விழாவாகும்.

கல்வி என்பதற்கு அறிவை பெறுவது என்று பொருள். அதே நேரத்தில், சிலவற்றை இழப்பதும் கல்வியாகும் என்றும் பொருள் சொல்லலாம்.

பல்வேறு மாதங்களும் அவரவர்களின் வழியில் இறைவனை சென்றடையும் வழிகளை காட்டுகின்றன. இயேசு கிறிஸ்து உலக மக்களிடத்தில் அன்பினை காட்டினார். தன்னிடமிருப்பவற்றை மற்றவருக்கு பகிர்ந்து அளித்தார். இத்தகைய நற்பண்பினை பெரும் விழா தான் கிறிஸ்மஸ்.

விழாவில் பள்ளி செயலாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக, விழாவிற்கு வந்திருந்தோரை பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். கல்வி ஆலோசகர் கணேசன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி துணை முதல்வர் சக்திவேலு, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்துக் கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் ஷீலா கிரேஸ், நான்சி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.