பெண் கல்வி, அடுத்த தலைமுறையின் வளர்ச்சி

-கே.பி.ஆர் கல்லூரியில் நடைபெற்ற பாரதி விழாவில் கே.பி. ராமசாமி பேச்சு

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியின் கே.பி.ஆர் பைந்தமிழ் மன்றத்தின் சார்பில் பாரதி விழா-2019 நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி பார் போற்றும் பாரதி எவ்வாறு மகாகவி என அழைக்கப்பட்டார் என்று கூறி வருகை தந்துள்ள சிறப்புவிருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றார். கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் முதல்வர் அகிலா பாரதி போற்றிய பெண் நலம் பற்றி விளக்கிக்கூறினார்.

விழாவிற்குத் தலைமையுரை வழங்கிய கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி பாரதியின் சிறப்புக்களையும் பெண்கல்வி பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் பெண்கல்வி என்பது தற்போதைய சமூகத்திற்கு முக்கியமான ஒன்றாகும். ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண், கல்வி பெறும்போது அந்தக்குடும்பம் மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையே அறிவு பெறுகிறது என்றும் கூறினார்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆர்.கே.ஆர் கல்லூரியின் தலைவர் ஆர்.கே. ராமசாமி, தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதல் என்பது வசீகரமான சொல். எனவே அனைத்திலும் முதல் என்ற வசீகரத்தைப் பெற வேண்டும். எதையும் சாதிக்கவேண்டும், எதிலும் சாதிக்க வேண்டும் என்ற அறிவுப்பசியும் சாதனைப்பசியும் எப்போதும் இருக்கவேண்டும். தற்போதைய சூழலில் IQ(Intelligence quotient), SQ(Social quotient),  EQ(Emotional quotient),  AQ(Administrative quotient) என்ற வகையில் அறிவுத்திறமையை சோதிக்கின்றனர். ஆகவே வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வாய்ப்புகள் உன்னைத்தேடி வந்தால் நீ அதிர்ஸ்டசாலி, வாய்ப்புகளைத் தேடி நீ சென்றால் புத்திசாலி, வாய்ப்புகளைப் பயன்படுத்தவில்லையென்றால் நீ ஏமாளி, வாய்ப்புகளே இல்லையென்று ஏங்கிக்கொண்டிருந்தால் நீ கோமாளி. பெற்றோர்களை மதிக்கத்தெரியாதவர்கள், ஆசிரியர்களை மதிக்கத்தெரியாதவர்கள், உதவி செய்யத்தெரியாதவர்கள் அனைவரும் இவ்வுலகத்தில் மிகவும் பாவப்பட்டவர்கள் என்றார். மேலும் நம் இயக்கமே நம் வாழ்வியலைச் செதுக்கும் படிக்கட்டுகள் என்றும் தமிழை நேசி, தாய்மொழியைச் சுவாசி என்றும் கூறினார்.

விழாவிற்கு நன்றியுரை  வழங்கிய வணிகவியல் துறை மாணவி விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் போராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.