இருசக்கர  வாகன விழிப்புணர்வு பேரணி

கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிவது குறித்த இருசக்கர  வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்  ராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இவ்விழிப்புணர்வு பேரணியில், மாநகர காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) பெருமாள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், குமாரவேல், ராஜு, சரவணன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்,

தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் விபத்துக்களில் பலியாபவர்களில் எண்ணிக்கை தலைக்கவசம் அணிவதின் மூலம் கணிசமாக குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வட்டார போக்குவரத்துறை இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  அதனை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து தலைக்கவசம் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மத்திய வட்டார போக்குவரத்து  அலுவலகத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளவும், பாதுகாப்பான பயணத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகன உரிமையாளர்கள் தனியார் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் ஆகியோர்களுக்கு அவ்வப்போது உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து விதிமுறைகளை மீறுவோர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் துறை, வட்டார போக்குவரத்து தறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, மற்றும் நுகர்வோர்களை கொண்ட பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சாலைப்பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கோவை மாவட்டத்தில் அனைத்து பிரதான சாலைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது சாலை விபத்துகளின்  சராசாரி 21 சதவீதமாக குறைந்துள்ளது.

சாலைப்பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளின் நோக்கமே உயிர்  இழப்பை தடுப்பதற்குகாகவும், சாலை விபத்துகளை குறைப்பதற்குகாகவும் மட்டுமே ஆகும். அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துகள் வெகுவாக குறைக்க முடியும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.