சுதந்திர தினத்தன்று லடாக்கில் தேசியக் கொடியேற்றும் தோனி

புதிய யூனியன் பிரதேசமாகும் லடாக்கில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றும் தோனி

சட்டமன்றம் இல்லாத புதிய யூனியன் பிரதேசமாக உருவாகவுள்ள லடாக்கில், சுதந்திர தினத்தன்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தேசிய கொடியை ஏற்றி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி, கடந்த ஜூலை 31ம் தேதி முதல் ராணுவத்தில் சேர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னல் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் சக வீரர்களுடன் இணைந்து ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ள தோனி, பணி முடிந்து ஆகஸ்ட் 15ம் தேதியுடன் வீடு திரும்ப இருக்கிறார்.

இந்நிலையில் ஜம்மு – காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு புதிய யூனியன் பிரதேசமாக உருவாகவுள்ள லடாக்கில் தோனி, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் லடாக்கின் எந்த பகுதியில் கொடியேற்ற இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் தோனி தேசியக் கொடியேற்றி வைக்கும் நிகழ்ச்சியில், லடாக் தொகுதியின் பாஜக எம்பி ஜம்யாங் செரிங்((Jamyang Tsering))கும் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து ஜம்யாங் செரிங், நாடாளுமன்றத்தில் உரையாற்றியதை பிரதமர் மோடி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.