இலக்கிய மன்ற தொடக்க விழா

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் தொடங்கியது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் உயராய்வுத்துறை உதவிப்பேராசிரியர் சேனாவரையன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழ் இலக்கியமும் வாழ்வியலும் என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது சிறப்புரையில் வாயிலாக, தொல்காப்பியர் காலந்தொட்டு மனிதன் வாழ்வதற்கான அறக்கோட்பாடுகள் பேசப்பட்டு வருகின்றன. சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும் முதன்மைப்படுத்தப்பட்டன.அந்த காதல் வாழ்க்கையிலும் வீர வாழ்க்கையிலும் அறம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.அதனைத் தொடர்ந்து காப்பிய காலத்தில் தனிமனித ஒழுக்கத்தோடு சமயம் வளர்ந்தது. பக்தி இலக்கியங்களில் ஒழுக்க நெறியும் பக்தி நெறியும் போதிக்கப்பட்டன.எனவே இன்றைய சூழலில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை அலைபேசி, முகநூல் மூலமாக அழித்துக் கொள்ளாமல் தளரா மனம், தன்னம்பிக்கை ஆகியவற்றை கடைபிடித்து வாழ்வை சிறப்பாக வாழவேண்டும் என்றுரைத்தார். இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் லட்சுமணசாமி அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்.

கல்லூரியின் முதன்மை நிர்வாக அலுவலர் சின்னச்சாமி மற்றும் கல்லூரியின் கல்விப்புலம் முதன்மையர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்த அனைவரும் தமிழ்த்துறைத் தலைவர் அரவிந்த் வரவேற்று பேசினார். தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் சரவணன் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். விழாவில் பல்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.