ரயிலில் இடம் பிடிக்க “ பயோமெட்ரிக் முறை “

நீண்ட தூர ரயில்களுக்கான பொதுப் பெட்டியில் பயோமெட்ரிக் மூலம் இடம்பிடிக்கும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

தொலைதூர ரயில்களில் முன்பதிவில்லாத பொதுப் பெட்டியில் இடம் பிடிப்பதில் தள்ளுமுள்ளு, அடிதடி உள்ளிட்டவை நடக்கின்றன. அதிக கூட்டத்தால் சிலர் படிக்கட்டுக்களிலும், கூரை மீதும் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

மேலும், ரயில்வே சுமைதூக்கும் தொழிலாளி, ஆர்பிஎஃப் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்து பொதுப்பெட்டியில் இருக்கை பிடித்து வைப்பதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது.

இதைத் தவிர்க்க ரயில்களில் பயோமெட்ரிக் எனும் கைரேகை பதியும் திட்டத்தை அமல்படுத்த மும்பை – லக்னோ இடையே பயணிக்கும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, சம்பந்தப்பட்ட ரயில் பெட்டியில் பதிக்கப்பட்டிருக்கும் பயோமெட்ரிக் முறையில் யார் முதலில் ரேகை பதிக்கிறாரோ? அவர்களுக்கு இருக்கை உண்டு.

மேலும், பொதுப்பிரிவு ரயில் பெட்டியில் எத்தனை பயணிகளுக்கு அனுமதி உண்டோ? அத்தனை பயணிகள் மட்டுமே அதில் கைரேகை பதிந்து பயணிக்க முடியும்.

இந்தத் திட்டத்தை பிறவழித்தட தொலைதூர ரயில்களிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.