நெல்சன் மண்டேலா (1918-2013)

விழாமலே வாழ்ந்தோம் என்பது பெருமை இல்லை, விழும் ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை, என்பதற்கு உதரணமாக வாழ்ந்தவர் இவர். இனவெறி, நிறவெறி என பல இன்னல்களை எதிர்த்து அதில் வெற்றி கண்டவர். எந்த ஒரு விடுதலை போராளியும் அனுபவிக்காத சிறை தண்டனையை பெற்றிருக்கிறார். 27 ஆண்டுகள் சிறைவாசம், வார்த்தையில் வர்ணிக்க முடியாத அடக்குமுறை என இன்னல்கள் தொடர்ந்த போதும் விடாமுயற்சியால் தனது தாய்நாட்டின் விடுதலையைப் பெற்றுத்தந்த நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள் தான் இன்று.

1918-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தார்.

சிறுவயது முதலே வெள்ளையர்களின் அடக்குமுறை ஆட்சியின் கொடுமைகளைக் கண்டு வந்த மண்டேலா தனது சட்டக்கல்வியை 1941-ம் ஆண்டு  முடித்தார். இவர் தன்னுடைய 21 வது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ஆங்கில ஆட்சியின் கொடுமைகளை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தார். தென்னாப்பிரிக்காவின் கனிம வளங்களைக் கொள்ளையிட வந்த கூட்டம், அந்த மண்ணின் மக்களையே அடிமைப்படுத்தி விலைக்கு விற்பதை தடுக்கப் போராடினார். அதற்காக 1943-ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் எனும் இயக்கத்தில் சேர்ந்தார். இவரது அயராத போராட்டங்களின் தீவிரங்களைக் கண்டு வெள்ளையர் கூட்டம் அதிர்ந்து போனது. 1956-ம் ஆண்டு இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நான்காண்டு விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்தனர்.

சிறைவாசத்துக்குப் பிறகு இவரது விடுதலைப் போராட்ட செயல்கள் தீவிரமானது. முழுமையான விடுதலைக் கோரி இவரது போராட்டங்கள் வெள்ளையர் அரசின் அஸ்திவாரத்தை ஆட வைத்தது. இதற்கு முன்னாள் அகிம்சை வழியில் போராடிய இவர் ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுக்கத் தொடங்கிய நெல்சன் மண்டேலாவின் அதிரடித் தாக்குதல்கள் அங்கிருந்த இளைஞர்களை வீறு கொண்டு எழச்செய்தன. தென்னாப்பிரிக்க தேசமே விடுதலைத் தீ பற்றிக்கொண்டு எரிந்தது. இதனால், மீண்டும் 1962-ம் ஆண்டு கைதான நெல்சன் மண்டேலாவுக்கு 1964-ம் ஆண்டு ஜூன் 12 அன்று  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 27 ஆண்டுகள் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டார். இளமையெல்லாம் கழிந்துபோன பிறகு 11.2.1990 அன்று விடுதலையானார். இவரோடு தென்னாப்பிரிக்காவின் விடுதலையும் உறுதியானது.

ஆம், 1994-ம் ஆண்டு நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார் நெல்சன் மண்டேலா. உலக சமாதானத்தையும் விடுதலை கொண்ட மக்கள் கூட்டத்தையும் விரும்பிய மக்கள் தலைவர் தனது 95-ம் வயதில் மரணமடைந்தார். ஆனால், இன்னமும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். நோபல் உள்ளிட்ட உலக விருதுகள் பலவற்றைப் பெற்ற நெல்சன் மண்டேலா தியாகத்தின் அடையாளமாக, அமைதியின் சின்னமாகவே வாழ்ந்தார்.