பன்னோக்கு பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, திருப்புத்தூர் திருநெறி திருமன்றம், ஆஸ்திரேலியா (சிட்னி) தமிழ் வளர்ச்சி மன்றம், சென்னை ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக்கட்டளை, மா.ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய பன்னோக்கு பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும் எனும் பொருண்மையிலான பன்னாட்டு கருத்தரங்கம் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் சு. குமரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், “தமிழ் இலக்கியங்கள் தமிழர்களின் வாழ்வியலை பதிவு செய்துள்ளது என்றும் இவ் இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது புதிய உண்மைகள் கண்டறியப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். இளைஞர்கள் பெருமளவில் அறிவியல் தொழிநுட்ப சாதனங்களில் சிந்தனையைச் செலுத்தி வருகின்ற தற்காலத்தில் தமிழர்களின் பண்பாட்டையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைப்பது பெரும் சவாலாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். இளைஞர்கள் சமயம் பேணல், மொழி வளர்த்தல் ஆகியவற்றில் முனைந்து செயலாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் டாக்டர் சி.ஏ.வாசுகி அவர்கள் தலைமையுரையாற்றினார். ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் இந்திய துறை பேராசிரியர் மற்றும் தலைவர், கலைப்புல முதன்மையர் என். லட்சுமி ஐயர் அவர்களும் கல்லூரி முதல்வர் மா.லட்சுமணசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். காரைக்குடி, அழகப்பா அரசு கலை கல்லூரி தமிழ் உயராய்வுதுறை இணைப் பேராசிரியர் மா.சிதம்பரம் அவர்கள் கருத்தரங்க நோக்கு உரையாற்றினார். முன்னதாக தமிழ்த்துறை தலைவர் முருகேசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவில் 250 பேராளர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. கல்லூரிச் செயலர் டாக்டர் சி.ஏ.வாசுகி அவர்கள் ஆய்வு கோவையின் முதல் தொகுதியை வெளியிட மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் சு. குமரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இரண்டாவது தொகுதியே ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் இந்திய துறை பேராசிரியர் மற்றும் தலைவர், கலைப்புல முதன்மையர் என்.லட்சுமி ஐயர் அவர்கள் வெளியிட கல்லூரியின் முதல்வர் லட்சுமணசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். மூன்றாவது தொகுதியை கல்லூரி செயலர் டாக்டர் சி ஏ வாசுகி அவர்கள் வெளியிட தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியின் மேனாள் தமிழ் பேராசிரியர் சு.ஞானப்பூங்கோதை அவர்கள் பெற்றுக்கொண்டார்.

விழாவின் நிறைவில் தமிழ்த்துறைத் தலைவர் அரவிந்த் அவர்கள் நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.