தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஆய்வுக் கூட்டம்

கோயம்புத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு  சட்டம் – 2013 தொடர்பாக தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர்  ஜெகதீஸ் ஹிர்மாணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பி.என்.பிரபாகரன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் ஆர்.சீனிவாசன், உதவி இயக்குநர் துவாகரநாத்சிங்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர்  பேசுகையில், கோவை மாவட்டம், கீரணத்தம் பகுதியில் பன்றி வளர்க்கும் குடோனில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது 27.06.2019 அன்று மூன்று நபர்கள் விஷவாயு தாக்கி மரணமடைந்தனர். இவர்கள் மூவரும் கழிவுநீர் தொட்டியினுள் இறங்கும் போது எவ்வித பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்திருக்கவில்லை. அதனால்தான் மரணமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 09.07.2019 தேதி அன்று மரணமடைந்த தொழிலாளி ராஜப்பன் என்பவது மனைவி சுந்தர் என்பவருக்கு கீரணத்தம் ஊராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.10இலட்சம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இருவருக்கும் உரிய சான்றிதழ்கள் வரப்பெற்றவுடன் விரைந்து நிதியுதவிகள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடைப் பண்ணைகள் மற்றும்கால்நடைகளை வளர்ப்போர்கள் அதனுடைய கழிவுகுழிகளை அமைக்க முறையான அனுமதி பெற்ற பின்னரே அமைக்க வேண்டும். இனி வருங்காலங்களில் கால்நடைகளின் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயந்திரங்களை பயன்படுத்துமாறு கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை தொழிலாளர் மலக்குழி சாக்கடை நச்சுவாயு மரணங்களை தடுக்க தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொள்ள வேண்டும்.

நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு காப்பீட்டுத்திட்டத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். அதுபோல, பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் என எவையாயினும், குறித்த காலத்திற்குள் தங்களும் கழிவுக்குழிகளை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி துப்புரவு செய்யப்பட வேண்டும்.

மேலும், கழிவுநீர் கால்வாய் காங்கீரிட்டுகளை அகற்றுதல் மற்றும் பாதிப்படைந்த காங்கீரிட் மூடிகளை மாற்ற இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை. புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாயுடன் இணைத்தல். கிணற்றுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள நீர் மூடிகளை மோட்டயர்களை எடுத்தல். கழிவுநீர் கால்வாயில் உள்ள மூடிகளை புதியதாக அமைத்தல். போன்ற பணிகளைத் தவிர்த்து வேறு எவ்வித பணிகளுக்கும் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது. எங்கெங்கு மனிதர்களை பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்க இயலாதோ, அவ்விடங்களில் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதியினை முன்கூட்டியே எழுத்து வடிவில் பெற்று அவர்களை உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயன்படுத்திட வேண்டும்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக கோவை காவல் துறை உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. என தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹிரிமாணி பேசினார்.