டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேரவைக் கூட்டம்

டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் தமிழ்த்துறைப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் முனைவர்.வே.சுகுணா அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். பன்னிமடை, அரசு மேல் நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.பூ.அ.இரவீந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “ஒளி படைத்த கண்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய உரையில், “பாரதி நல்ல கவிஞன், கட்டுரையாளன், இதழாசிரியன் மட்டுமல்ல, மிகச்சிறந்த ஓவியனும் ஆவான். அறிவார்ந்த பெண்களை நல்ல சித்திரமாகத் தீட்டியவன். பெண் விடுதலைக்கு குரல் கொடுத்தவன். எத்தனையோ மொழிகளை பாரதி கற்றிருந்தாலும் தமிழை உயிராக நினைத்தவன். அதனால் தான் உயர்தனிச் செம்மொழியான தமிழ் விளங்குகிறது. எத்தனையோ கவிஞர்கள் இருந்தாலும், வள்ளுவனையும், கம்பனையும், இளங்கோவையும் பாராட்டுகிறான். வறுமை நிலையில் இருந்தாலும் மரணத்தை கண்டு பயப்படவில்லை பாரதி. காலனையும் ஒரு சிறு புல்லென மதித்தான்.

இன்றைய மாணவர்கள் புத்தகம் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவையே மிகச்சிறந்த நண்பர்கள். இனிய சொற்களைப் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ள உறவு ஒரு தோழமை உணர்வுடன் இருக்க வேண்டும். அன்பு ஒன்றே இந்த உலகத்தை வாழ வைக்கும். அன்பும், சிலமும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். துன்பத்தை பார்த்து துவண்டு விடாமல் அதனை இன்பமாக்க கற்றுக்கொண்டால் வாழ்க்கையில், உயர்நிலையை அடையலாம்” என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் கவிஞர் பூவரசி மலையரங்கன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.