ஆண்டாள் திருப்பாவை நூல் வெளியீட்டு விழா

கோவை இன்டிகா அமைப்பும் கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியும் இணைந்து ஆண்டாள் திருப்பாவை நூல் வெளியீட்டு விழாவை கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடத்தின.

சிறப்பு விருந்தினராக கோவை திருப்பாவை கூட்டத் துணைத் தலைவரும் வரலாற்று அறிஞருமான ராஜேஸ் கோவிந்தராஜுலு நூலை வெளியிட, கல்லூரி செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், ‘ஆண்டாள் நாச்சியார் எழுதிய திருப்பாவை பாடல்களை மனமொன்றிப் படித்தால் வாழ்க்கையில் மகத்தான மாற்றம் ஏற்படும். திருப்பாவை நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் உள்ளுரையாகத் திகழ்கிறது’ என்றார்.

இன்டிகா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.பிரமோத்குமார், கோவை மில்லினியம் ரோட்டரி சங்க மாவட்டத் தலைவரும் சற்குரு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான வி.எஸ்.சுதாவர், கலாம் ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதல்வர் முனைவர் வே.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

நூலாசிரியர்களான ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஷோபா ராமசாமி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.மணிமேகலை ஆகியோருக்கு பனாமா நாட்டிலுள்ள ஸ்விக்லி பல்கலைக்கழகம் ‘‘மெய்யியல் துறை வல்லுநர்’’ என்ற விருதை வழங்கியது.