இந்தியாவின் அனைத்து மொழியும் நாட்டின் அடையாளமே – பிரதமர் மோடி

கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் பிரச்சினையை கிளம்ப முயற்சி செய்வதாகவும், ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்றும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இதில் அவர் பேசியதாவது: இந்த மாதத்துடன் 8 ஆண்டுகளை பாஜக அரசு நிறைவு செய்கிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், பெண்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதாகவும் இந்த அரசு அமைந்து வருகிறது எனக் கூறினார்.

உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. நம் நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.

ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய பண்பாடு எதிரொலிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் தேசத்தின் அடையாளம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபகாலமாக மொழிகளை வைத்து நாட்டில் சர்ச்சைகள் எழுந்தன. தேசிய கல்விக்கொள்கையில் ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளமான எதிர்காலக் குறியீட்டை எழுதத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞரையும் பாஜகவுடன் இணைக்க வேண்டும். மேலும் குடும்ப கட்சிகள் ஊழல்,மோசடி என நாட்டின் மதிப்பு தக்க நேரத்தை வீணடித்து உள்ளன எனவும் விமர்சித்துள்ளார்.