மார்க்கெட் பகுதிகளில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

-மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி

கோவை மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உழவர் சந்தைகள், சாய்பாபாகாலனி அண்ணா காய்கறி மார்கட், ஆகிய பகுதிகளில் இன்று (27.03.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வாய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, வேளாண் விற்ப்பனைக்குழு இணை இயக்குநர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரோ வைரஸ் தொற்று உலக சுகாதார நிறுவனம் ஒரு பேரிடராக அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்படுத்திய நிலையில், பாரத பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 4 வரை தடை உத்தரவினை செயல்படுத்திட அறிவுறுத்தினார்கள். ஆகையால் பொதுமக்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும், வீட்டை விட்டு யாரும் வெளியில் செல்லக்கூடாது. இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் அன்றாட உணவுத் தேவைக்கான காய்கள் பெற ஏதுவாக கோவை மாவட்டத்திலுள்ள, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, சிங்காநல்லூர், சுந்தராபுரம், சூலூர், பொள்ளாச்சி, மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றது. மேலும், பொதுமக்கள் கூட்டத்தினை தவிர்க்கும் பொருட்டு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள இராஜ வீதி தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் ஒரு பகுதி காந்திபுரம் நகரப் பேருந்து நிலைய வளாகத்திலும், அதேபோல் உக்கடம் இராமர் கோவில் காய்கறி மார்க்கெட்டில் ஒரு பகுதி உக்கடம் பேருந்து நிலைய வளாகத்திலும், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி அண்ணா காய்கறி மார்க்கெட் ஒரு பகுதி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தலும் இயங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த தனியார் காய்கறி மார்கெட் உடனடியாக மூடப்படும்.

விவசாயிகள் ஒவ்வொரு கடைக்கும் இடையே ஒன்றரை மீட்டர் இடைவெளி விட்டு கடைகள் அமைக்க வேண்டும். காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று வாங்கிக்கொள்ளலாம். எக்காரணத்தினைக் கொண்டும் பொதுமக்கள் கூட்டமாக வந்து செல்லக்கூடாது. உழவர் சந்தைகளை கண்காணிக்க வேளாண்மை விற்பனைக்குழு, காவல்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்து அரசு எடுத்திடும் அனைத்து வகையான முயற்சிகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.