கலைஞர்கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் “தேசிய டிஜிட்டல் பாதுகாப்பு உச்சிமாநாடு 2023”

கோவை கலைஞர்கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி  மற்றும்  நேஷனல் சைபர் செக்யூரிட்டி ரிசெர்ச் கவுன்சில் சார்பில் “தேசிய டிஜிட்டல் பாதுகாப்பு உச்சிமாநாடு 2023”  வெள்ளி மற்றும் சனி என இரு தினங்கள் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் தலைமை விருந்தினராக, கர்நாடக சட்ட ஆணையர் மற்றும் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான பன்னூர்மத் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இயக்குநர் சித்தலிங்க சுவாமி கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் காளிராஜ் பங்கேற்றார்.

கே.ஐ.டி.யின் முதல்வர் ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். துணைத்தலைவர் இந்து முருகேசன் பேசுகையில் சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும், தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் சைபர் குற்றங்களுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

தலைமையுரை ஆற்றிய பன்னூர்மத் புதுமைகளை இலக்காகக் கொண்டு நமது வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில் இணைய குற்றங்கள் மற்றும் ஃபிஷிங்  ஆகியவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது நமது தனிப்பட்ட பொறுப்பு என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.  வணிகங்கள், வங்கிகள் மற்றும் பலவற்றின் மூலம் நடக்கும் சைபர் குற்றங்களை விவரித்து, உலகில் இணைய குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு மீறல்கள் அதிகரித்து வருவதாகவும், அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை விவரித்தார்.

சிறப்புரையாற்றிய சித்தலிங்க சுவாமி சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் சிக்கல்கள் குறித்த கல்வி மற்றும் AICTE திட்டங்களை பற்றி விளக்கினார்.மேலும், அவர் மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை சித்திர விளக்கங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

காளிராஜ் அதிக அச்சுறுத்தலாக இருக்கும் டிஜிட்டல் தரவு சொத்துக்கள் மற்றும் டிஜிலாக்கரின் முக்கியத்துவம் மற்றும் அதன் நுணுக்கங்கள் குறித்து பேசினார்.

இந்நிகழ்விற்கு கல்லூரி நிறுவன தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் கல்லூரி துணைத்தலைவர் இந்துமுருகேசன், கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, கல்லூரி முதல்வர் ரமேஷ், டீன்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.