ஊட்டி மலர் கண்காட்சியை 3 நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்

ஊட்டியில் கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் இந்த ஆண்டுக்கான கோடைவிழா தொடங்கியது. தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி மற்றும் படகு போட்டிகள் நடைபெற்றன. மேலும், புகைப்பட கண்காட்சி, மரபு வழி நடைபயணம், குன்னூரில் தேயிலை கண்காட்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.

கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந்தேதி ஊட்டியில் தொடங்கியது. கண்காட்சியையொட்டி பூங்கா நுழைவு வாயிலில் பல்வேறு வண்ண மலர்களால் ஆன 10-க்கும் மேற்பட்ட அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில் 45 ஆயிரம் பல வண்ண கொய்மலர்களை கொண்டு மயில் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. மலர்களால் ஆன தமிழ்நாடு மாநில சின்னங்கள், அழியும் பட்டியலில் உள்ள விலங்குகளின் உருவங்கள், இளைஞர்களை கவரும் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டிருந்தன. அலங்கார மேடைகளில் கார்னேசன், ரோஜா மலர்கள் ஆந்தூரியம் மற்றும் ஆர்கிட் மலர்களும் வைக்கப்பட்டுள்ளன. இவை 35 ஆயிரம் தொட்டிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இவற்றை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். மலர் கண்காட்சி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. வாரவிடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்து, அங்கு மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள அலங்கார வடிவங்களை கண்டு ரசித்தனர். மேலும் குடும்பத்துடன் தாவரவியல் பூங்கா புல்வெளியில் அமர்ந்து பேசியும், விளையாடியும் பொழுதை கழித்தனர். கண்காட்சி தொடங்கிய நாளன்று 22 ஆயிரத்து 711 பேர், 2-வது நாள் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், 3-வது நாளான ஞாயிற்றுக்கிழமையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். 3 நாளில் மட்டும் 92 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர்.

கோடைவிழா காரணமாக ஊட்டி நகரில் முக்கிய சாலைகளான அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, ஊட்டி – மைசூா் சாலை, ஊட்டி – கோத்தகிரி, குன்னூா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால், வாகனங்கள் பல கிலோ மீட்டா் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களிலேயே சிக்கிக் கொண்டதால் பல்வேறு இடங்களை பாா்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரிவித்தனா்.

ஊட்டியில், கோடை விழா நடைபெற்று வருவதால் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த காவலா்கள் பாதுகாப்பு, போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த காவலா்களுக்கு சுற்றுலாத் தலங்கள் எங்கெங்கு உள்ளன. எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற விவரங்கள் தெரியாததால், சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய வழிகாட்டுதல் செய்ய முடியாமல் உள்ளனா்.

இதனால், சுற்றுலாப் பயணிகள் அவதியடைவதாகவும், கோடை விழாவுக்கு பணியமா்த்தும் காவலா்களுடன் உள்ளூா் காவலா் ஒருவா் இருந்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் மேலும் போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்த முடியும் என்று உள்ளூா் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கருத்து தெரிவித்தனர்.