தமிழ்நாடு வேளாண் பல்கலையில் “அறிவுசார் சொத்து” குறித்த பயிலரங்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம் மற்றும் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி பயிலகமையம் ஆகியவை இணைந்து “அறிவுசார் சொத்து” குறித்த பயிலரங்கம் மற்றும் முதுகலை மாணவர்களுக்கான “வினாடி வினா போட்டி” ஆகியவற்றை நடத்தியது. உலக அறிவுசார் சொத்துரிமை தினம் 2023 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அண்ணா கலையரங்கத்தில் புதன்கிழமை துணைவேந்தர் கீதாலட்சுமி வழிகாட்டுதலின்படி கொண்டாடப்பட்டது.

முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் செந்தில் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் அவர்கள் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டி அவர்களின் ஆய்வுப் பணிகளில் மூலம் 9 காப்புரிமைகளை தாக்கல் செய்ததற்காக அவர்களை வாழ்த்தினார். வரவிருக்கும் ஆண்டுகளில் மேலும் காப்புரிமைகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் செயல் முறையையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அங்கீகரிக்கப்பட்ட காப்புரிமை வழக்கறிஞர் மீனா தொடக்க உரை நிகழ்த்தி மாணவர்களின் காப்புரிமை நடைமுறைகளின் கருத்து மற்றும் செயல்முறைகளை அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குனர் சுரேஷ் குமார், வேளாண்மை முதன்மையர் நவெங்கடேச பழனிச்சாமி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஆர்த்தி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் உதவிப்பேராசிரியை ப்ரீத்தி ஆகியோர் தலைமையில் குழு விவாதம் நடந்தது. குழு உறுப்பினர்கள் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் காப்புரிமைகளின் தேவையை முன்னிலை படுத்தி உரை நிகழ்த்தினார்கள். காப்புரிமை குறித்த வினாடி-வினா போட்டி பேராசிரியர் மற்றும் தலைவர் பாலாஜி கண்ணன் அவர்களால் நடத்தப்பட்டது.