மின்சாரம்! வேண்டாம் அலட்சியம்

விளக்குகிறார் மின்சாரக்கண்ணன் பிரேம்குமார்

மின்சாரம், அறிவியல்  கண்டுபிடிப்புகளின் உச்சம். சூரிய வெளிச்சத்திலும் விளக்கு ஒளியிலும்  வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இரவு, இருட்டைக் குறித்த பயம் இன்றியும் அதனைப் பயன்படுத்தியும் முன்னேறினான்.  அதன்மூலம் அவன் இந்த உலகிற்குக் கொடுத்த பலன்கள் எண்ணற்றவை. அதேநேரம், இந்த மின்சாரத்தால் தாக்குண்டு உயிர் சேதமும், பொருள் சேதமும் கண்டான். காரணம், அதனை சரியாக, முறையாகக் கையாளாததுதான். இதையடுத்து மின்சாரத்தை எவ்வாறு முறையாகக் கையாளுவது என்று சிந்தித்து அதற்கென விதிமுறைகள் வகுத்தான். இருப்பினும், உலக அளவில் இன்னும், இன்றும் மின்சாரம் சார்ந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்த இக்கட்டில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், வீடு மற்றும் நாட்டின் உடைமைகளைக் காப்பாற்றவும் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்புதான், என்.எஃப்.இ (NFE) – மின்சாரப் பாதுகாப்பிற்கான தேசியப் பொறியாளர் கூட்டமைப்பு (National Federation of Engineers for Electrical Safety). புதுடெல்லியில் உள்ள இந்த அமைப்பு மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்த ஓர் வழிகாட்டி ஆவணத்தை (National Electrical Code of India – NEC) உருவாக்கியுள்ளது.

இந்த அரசு சாரா அமைப்பின் (என்.ஜி.ஓ) துவக்க விழா அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த அமைப்பின் நோக்கம், மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மின் இணைப்பையும் மின்கசிவு மற்றும் மின்சார தீ விபத்தில் இல்லாமல், மக்களின் உயிர், உடைமைகளைக் காத்து, அவர்களிடையே ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கி நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிப்பதாகும்.

இந்த விழாவில், மொத்தம் 300 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 3 உறுப்பினர்கள், அதில் நமது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து ஒருவர்தான் பங்கேற்றார். அவர், இந்த அமைப்பின் 19 வது உறுப்பினராக உள்ள, இந்த அமைப்பின் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து நிறுவனம் நடத்தும் இளம் பொறியாளர் கே. பிரேம்குமார் ஆவார். இவர், கோயம்புத்தூரில் ப்ளாக் அன்ட் ஒயிட் கன்சல்டன்ட் எனும் மின்சாதனப் பணிகளுக்கான ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு குறித்தும் தனது தொழில் அனுபவம் குறித்தும் இவர் நம்முடன் இவர் பகிர்ந்துகொண்டவை:

‘எனது சொந்த ஊர் தஞ்சாவூர். 19 வயதில் டிப்ளமோ இன் எலெக்ட்ரிக்கல் படித்தேன். அடுத்து, மூன்று வருடங்கள் மின்பொறி உதவியாளராகப் பணி செய்தேன். சி லைசென்ஸ் வாங்கினேன். பின்னர் என்.ஐ.டி இல் பி.இ படித்து முடித்தேன். தஞ்சாவூரில் எம்.டெக் முடித்து கன்சல்டென்சி ஆரம்பித்தேன். இந்தத் தொழிலில் எனக்கு 29 வருட அனுபவம் உள்ளது. இந்த 2023 ஏப்ரல் மாதம், எனது தொழில் அனுபவத்தின் 30 வது வருடமாகும். எனது நிறுவனம் ஆரம்பித்து 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த ஆண்டுகளில் கல்வி நிறுவனம், கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள் என 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எனது மின் சாதனப் பாதுகாப்பு சேவையை செய்துகொடுத்துள்ளேன்.

இதுவரை நான் கடந்து வந்த அனுபவத்தில் தெரிந்துகொண்டது என்னவென்றால், மின்சாதனங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த சர்வதேச மற்றும் தேசிய அளவிலான தர நிர்ணயம் என்று ஒன்று உள்ளது. அதேபோல் மத்திய அரசின் மின் பாதுகாப்பிற்கான வரைமுறைகள் (என்.இ.சி) என்பதும் நடைமுறையில் உள்ள ஒன்றே. ஆனால் அவை எல்லாம்  வெறும் காகிதங்களில் மட்டும்தான் உள்ளன. பயன்பாட்டில், நடைமுறையில்  இல்லை என்பதே இங்கே சிக்கலான தகவல். அதனால்தான் இந்த என்.எஃப்.இ துவங்கப்பட்டது. மக்களிடம் மின்சாதனப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

பொதுவாக, நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் என்றால், அந்த வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும்போது, இணைப்பு கொடுத்து விடுவார்கள், மின்சாரம் கிடைத்துவிடும், வீட்டில் மின் சாதனங்கள் எரியும். அவ்வளவுதான் முடிந்தது என நினைக்கிறார்கள். ஆனால் இணைப்பு பெறுவதற்கு முன்னர் வெளிநாடுகளில் மிக முக்கியமாகப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான நடவடிக்கை நம் நாட்டில் நடைமுறையிலேயே இல்லை.

அதாவது, ஒரு வீட்டில் அல்லது நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட மின்சாதன இணைப்புகள் எல்லாம் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளனவா என்று எலெக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர்ஸ் யாரும் பரிசோதனை  செய்வதில்லை. இந்த சோதனைக்கு லூப் இம்பெடன்ஸ் டெஸ்ட் என்று பெயர். இந்த சோதனை செய்யப்பட்ட பின்னர்தான் மின்சார இணைப்பே வழங்கப்பட வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நேரடியாக செய்யப்படாமலே, எல்லாம் சரியாக செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கின்றனர். மக்களும் மின்சாரம் பெற்று அங்கே வாழ்கிறார்கள். பொதுவாக, இங்கு எல்லோரும் மேற்கொள்ளும் மெகர் டெஸ்டிங் கூட சரியாக செய்யப்படுவதில்லை.

இந்த லூப் இம்பெடன்ஸ் டெஸ்ட் (எர்த் லூப் மின்தடை பரிசோதனை) என்பது மின்சுற்றில் தவறுகள் ஏற்பட்டால், மின்சுற்றுப் பாதுகாப்பை அமைக்க போதுமான மின்னோட்டம் வலுவாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய நடத்தப்படுகிறது. ஒருவேளை, ஏதேனும் ஒரு தவறான மின்னோட்டம் கண்டறியப்படாமல் விடப்பட்டால், அந்த Circuit அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கக் காரணமாகலாம். ஆகவேதான், இந்த சோதனை வெளிநாடுகளில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சோதனைக்குப் பின் பெறப்படும் மின் இணைப்புகளில் எந்த அசம்பாவிதமும் நடைபெறுவது பெருமளவில் தவிர்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஆண்டுக்கு ஒரு கோடி பேரில் 750 பேர் மின்சார ஷாக் அடித்து இறக்கின்றனர். ஆனால், ஜப்பான் நாட்டில் ஒரு கோடி பேருக்கு 2 பேர் மட்டுமே மின்சார ஷாக் அடித்து இறக்கின்றனர் என்கின்றது ஆய்வுப் புள்ளிவிவரம்.  இதனை நெறிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்.எஃப்.இ அமைப்பின் நோக்கம்.

பொதுவாக, நாம் வாங்கும் ஒவ்வொரு மின்சாதனப் பொருளிலும் OK Tested என்று எழுதப்பட்டு இருக்கும். இதன் அர்த்தம், இந்தப் பொருள் ஷாக் அடிக்க வாய்ப்பில்லை, சோதனை செய்யப்பட்டது என்பதாகும். அப்படியிருக்க, ஒரு வீட்டிற்கு அல்லது நிறுவனத்திற்கு செய்யப்படும் மின் இணைப்பில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

இந்த லூப் இம்பெடன்ஸ் டெஸ்ட் செய்வதற்கான கருவியைத் தயாரிக்கும் நிறுவனம், இந்தியாவில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்பது வியப்புக்குரிய தகவல். நமது கோயம்புத்தூர் சிறுகுறு நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் இதனைக் கருத்தில்கொண்டு இந்தக் கருவியைத் தயாரிக்க முன்வந்தால் தேசிய அளவில் நல்ல லாபமும் முன்னேற்றமும் காணலாம்.

மின்சாரத் தீ விபத்து என்பது தளர்வான, தவறான இணைப்புகளால் (Loose connection) ஏற்படும். இதற்கு சிறு தவறுதான் காரணம். பொதுவாக, வயர் கனெக்ஷன் கொடுக்கும்போது என்ன செய்கிறார்கள் எனில், இன்சுலேஷன் டேப் சுற்றுகிறார்கள்.  இதனால் அங்கே ஏற்படும் வெப்பத்தாக்கத்தால் சூடு அதிகமாகி, மின்கசிவு ஏற்பட்டு மின்சார விபத்து ஏற்படுகிறது. இதனைத் தடுக்க இன்சுலேஷன் டேப்க்குப் பதிலாக சந்தையில் தாராளமாக, ஏராளமாக, விலை மிகவும் மலிவாகக் கிடைக்கும் கோர் கனெக்டர்களைப் பயன்படுத்த வேண்டும். இன்சுலேஷன் டேப்க்கு ஆயுள்காலம் ஒரு ஆண்டுதான். குறிப்பாக, குழந்தைகள் விளையாடும் இடங்களில் இதனைப் பயன்படுத்தக் கூடாது. இதனைத் தவிர்ப்பது ஒரு சிறிய வேலை. ஆனால் இதனை யாரும் செய்வதில்லை, இதுகுறித்த விழிப்புணர்வும் இல்லை. இதனால் பல உயிர் இழப்புகள் ஏற்படுவது வருத்தத்திற்குரியது.

மின்கசிவுக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம், சரியாக மேற்கொள்ளப்படாத, தவறான மின்சாதனப் பொருத்துதல்தான். இதனைத் தடுக்க தவறான அனுபவ வழிகாட்டுதல்கள் தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்று அடிப்படை wiringலேயே நடக்கும் தவறுகள் சரி செய்யப்பட வேண்டும். அதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு வேண்டும்.

கை தட்டினால், குரல் கொடுத்தால் விளக்குகள் எரியும் வகையில் மின்சாதனப் பொருட்களில் எவ்வளவோ உயர்ந்த, ஆடம்பரக் கண்டுபிடிப்புகள் வந்துவிட்டாலும், நாம் இன்னும் சர்வதேச தர நிர்ணயம் அறியாமலும், தரமான மின்சாதனப் பொருட்களைக் குறித்து அறியாமலும், தரநிலை அடிப்படை தெரியாமலும், கனெக்ஷன் கொடுப்பதில்கூட அடிப்படைத் தவறுகள் செய்துகொண்டு இருக்கிறோம் என்பது திருத்திக்கொள்ள வேண்டிய செயலாகும்.

மற்றுமொரு தகவல், தற்போது பவர்கட் ஆவதால் பல வீடுகளிலும் யூ.பி.எஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூ.பி.எஸ் பொருத்தும்போது ஃபேஸ், நியூட்ரல், எர்த் என மூன்று வயரிங் செய்ய வேண்டும். ஆனால், இங்கே நாம் ஒரு வயரிங் மட்டுமே செய்யப்படுகிறது. இது தவறான செயல்முறையாகும். இதன்மூலம் இ.பி. நியூட்ரல் மூலமாக ட்ரான்ஸ்ஃபார்மெரில் (transformer) அதிக மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும். இதுதான் கம்பத்தில், ட்ரான்ஸ்ஃபார்மெரில் பணி செய்துகொண்டிருந்த இ.பி. பணியாளர் ஷாக் அடித்து இறந்தார் என்ற செய்தி பத்திரிகையில் வருவதன் பின்னணி.

இதுமட்டுமல்ல, பெரிய பெரிய கட்டடங்கள், அதாவது மருத்துவமனைகள் கட்டும்போது, லிப்ட், காத் லேப், யூ.பி.எஸ்., எக்ஸ் ரே-க்கு என ஒவ்வொன்றிற்கும் ஒரு எர்த் வேண்டும் எனக் கேட்டு பல இடங்களில் எர்த் போடுகிறார்கள். இதுவும் தவறு. மின்கசிவுக்கு இதுவும் மிக முக்கிய காரணம். என்.இ.சி அடிப்படை விதிமுறைப்படி, ஒரே ஒரு எர்த் அனைத்துக் கட்டடத்துக்கும் போதுமானது. தனித்தனி டெடிகேஷன் எர்த் எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்காது. க்ரௌண்டிங் மற்றும் எர்த்திங் இரண்டும் வித்தியாசமானது. வீடு என்றால் அனைத்துப் பொருட்களுக்களான எர்த்தையும் ஒருங்கிணைத்து இ.பி. மீட்டர் அருகே, நிறுவனம் என்றால் ட்ரான்ஸ்ஃபார்மெர் மீட்டர் அருகேதான் தமிழ்நாடு அங்கிகரித்த டிடி எர்த்திங் போன்றவற்றைப் போட வேண்டும். எர்த் மண்ணிற்குப் போகக்கூடாது, மின்சாரம் சோர்ஸான  ட்ரான்ஸ்ஃபார்மெருக்குத்தான் போகணும். இதனால் எர்த்தில் உள்ள தவறு அப்படியேதான் இருக்கும். அது மீண்டும் பிரச்னைதான் செய்யும்.

நம் நாட்டில் உள்ள மின்சார சட்டம், எல்லா மாநிலங்களுக்கும் சரிசமமாக பொதுவாக்கி கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். விதிமுறை புத்தகங்களில் இருப்பவை, நடைமுறை வாழ்க்கையில் சட்டமாக்கப்பட வேண்டும். மின் ஒப்பந்தத்தாரர்கள் அனுபவத்தில் பல வருடங்களாக செய்துவரும் தவறுகள் சரியாக்கப்பட வேண்டும். அதனைச் செய்வதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் என்.எப்.இ – ன் நோக்கம். இதனையே எனது நோக்கமாகவும் கொண்டு செயல்படுகிறேன். அதனால்தான் எனக்கு இந்த அமைப்பில் ஒரு கௌரவம் கிடைத்தது.

மேற்சொன்ன பேசிக் வயரிங் குறித்த அடிப்படைத் தகவல்கள்கூடத் தெரியாமல் என்னைத் தேடி வரும் மக்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைவருக்கும் பயன்படும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி, எலக்ட்ரிக்கல் குறித்த உண்மைகளை, ட்ராட் சீக்ரெட் என்று எதையும் மறைக்காமல் எடுத்துச்சொல்லி அவர்களுக்கு சேவை செய்வதாலேயே எனது நிறுவனத்திற்கு ப்ளாக் அன்ட் ஒயிட் கன்சல்டன்ட் எனப் பெயர் வைத்தேன்’. என்றார்.