அரசனை நம்பி  புருஷனை கை விடுகிறதா இ.பி.எஸ் அணி?

பாஜகவை கழற்றிவிட எடப்பாடி பழனிசாமி அணியினர் மேற்கொள்ளும் முயற்சி அரசனை நம்பி, புருஷனை கைவிடுவது போல உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நெய்வேலியில் போராட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், திமுக – பாஜக கூட்டணி வரப்போகிறது எனக் கூறியிருந்தார். இடதுசாரிகள், விசிக, காங்கிரஸ் போன்றவற்றை திமுக நட்டாற்றில் விடப்போகிறது என பேசியிருந்தார்.

அவர் கூறிய கூற்றை பகுத்தாய்ந்து பார்க்கும்போது அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருந்தார். இதற்கு என்ன காரணம் என யோசித்து பார்த்தால் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இதில் பங்கேற்ற பெரிய கட்சித் தலைவர்கள் அனைவரின் புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மல்லிகார்ஜுன கார்கே, ஸ்டாலின், சீதாராம் யெச்சூரி, மம்தா பானர்ஜி, அரவிந்த் ஜெஜ்ஜரிவால், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் படங்களை பகிர்ந்திருந்தார்.

குறிப்பாக ஆந்திராவை பொறுத்தவரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு என இருவரின் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். ஆனால், தமிழகத்தில் ஸ்டாலின் படத்தை பகிர்ந்த மோடி, எடப்பாடி பழனிசாமி படத்தை தவிர்த்திருந்தார். இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது.

இதுபோன்று குஜராத்தில் நடந்த பாஜக முதல்வர் பூபேந்தர் படேல் பதவியேற்பு நிகழ்ச்சியில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலர் வி.எல்.சந்தோஷ் ஆகியோர் பன்னீர்செல்வத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தனர்.

இதுவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். இதன் வெளிப்பாடே திமுக, பாஜக கூட்டணி ஏற்பட இருப்பதாக சி.வி.சண்முகம் கொளுத்திப்போட்டார். கூட்டணி தன்மையை ஆய்வு செய்து பார்த்தால், காங்கிரஸுடன் நல்லுறவையையே ஸ்டாலின் பேணி வருகிறார். ஹிமாசல பிரதேச வெற்றிக்காக காங்கிரஸுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், குஜராத் தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு வாழ்த்து சொல்லவில்லை.

அதேபோல, ஒரு மாதத்துக்கு முன்னரே அதிமுக கூட்டணி பற்றிய கேள்விக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக பலம் குறைந்துவிட்டது என கூறியிருந்தனர்.  காங்கிரஸில் உள்ள எம்.பி.க்களில் பெரும்பாலானோர் ஸ்டாலின் ஆதரவு நிலையிலேயே கருத்து தெரிவித்து வருகின்றனர். கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி மட்டுமே இன்னும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்.

இது நடந்த பிறகும் சி.வி.சண்முகம், திமுக கூட்டணி உடையும் என கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் ஏன் இதுபோல கூறுகிறார் என ஆய்வு செய்தால் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த 2 மாதங்களுக்குப்பின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது கூட்டணியில் பாஜக இருந்ததால் சிறுபான்மையினர் வாக்குகளையும், பாமக இருந்ததால் தலித்கள் வாக்குகளையும் இழந்தோம். இதனால் தான் தோல்வி அடைந்தோம் என கூறியிருந்தார்.

ஆனால், அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்ததால் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என உடனே அறிவித்தார். அதேநேரத்தில் பாமக கூட்டணி தொடர்கிறது என அறிவிக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி அப்போது அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என உறுதிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து சி.வி.சண்முகம் கருத்து தனிமைப்படுத்தப்பட்டது.

ஆனால், அதிமுக பிளவில் சி.வி.சண்முகத்தின் இப்போதைய கருத்து வெளியாகி ஒரு வார காலமாகியும் அதற்கு பதில் கருத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவில்லை.  அன்று அது சி.வி.சண்முகத்தின் சொந்த கருத்து எனக் கூறிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இப்போது சண்முகத்தின் கருத்தை வலுப்படுத்தும் வகையிலேயே பேசி வருகிறார்.

இதையெல்லாம் பார்க்கும்போது பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமி மோதியது, பாஜகவை கழற்றிவிடுவதற்கான வியூகம் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பாஜகவை கழற்றிவிட வேண்டிய நிர்பந்தம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் ஏற்படுகிறது என பார்த்தால் தமிழகத்தை பொறுத்தவரை 1998 மக்களவைத் தேர்தலுக்கு மேல் பாஜக எந்த அணியில் இருந்தாலும், அதற்கு நேர் எதிர்அணிக்கு ஒட்டுமொத்தமாக மத சிறுபான்மையினர் வாக்களிக்கும் தன்மை தமிழகத்தில் இருந்து வருகிறது.

அவர்கள் அரசியல் ரீதியாக வாக்களிக்காமல் மத அடிப்படையில் வாக்களிப்பதால் 1996 முதல் 2001 வரை பொற்கால ஆட்சி என்ற பெயரில் திமுக ஆட்சியை கொடுத்தாலும், கருணாநிதி 2001 பேரவைத் தேர்தலில் 38.7 சதவீத வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஜெயலலிதா அணி 50 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றது. 11.4 சதவீத வித்தியாசத்தில் கருணாநிதி தோல்வி அடைந்திருந்தார். ஜெயலலிதாவுக்கு விழுந்த வாக்குகளில் 12 சதவீதத்துக்கு மேல் சிறுபான்மையினர் வாக்குகள் தான் என தெரியவந்தது. 2004 இல் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் 39.9 சதவீத வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா தோல்வி அடைந்திருந்தார்.  கருணாநிதி 44.7 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்தார்.  ஜெயலலிதா 4.8 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திமுக எடுத்த வாக்குகளில் 12 சதவீதம் சிறுபான்மையினர் வாக்குகள் தான். குறிப்பாக ஹிந்து வாக்குகளில் கருணாநிதியைவிட ஜெயலலிதாவுக்கு அதிகம் விழுந்தது.

இதை உணர்ந்த ஜெயலலிதா அதன் பின்னர் எந்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.  இதேபோல இப்போது நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும், திமுக அணி 45.3 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தது. அதிமுக 39.7 சதவீத வாக்குகளை பெற்று தோல்வி அடைந்திருந்தது. 5.6 சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுக அணி தோல்வியை தழுவியது.

இதிலும் திமுக அணிக்கு, மோடி எதிர்ப்பு என்ற புள்ளியில் மிக அதிகமாக குவிந்தது. இதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி 2026 பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் மட்டுமே சிறுபான்மையினர் வாக்குகளை திமுக அணியில் இருந்து உடைத்து தனக்கு சாதகமாக ஓரளவு திருப்ப முடியும் என கணக்குப்போட்டுள்ளார். இதன் காரணமாகவே, அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ், விசிக வரமாட்டோம் என உதறிய பின்னரும், திமுக – பாஜக உறவு ஏற்படும் என சந்தேகத்தை கிளப்பி பாஜகவை கழற்றிவிடுவதற்கான ரேகையை உணர்த்தியுள்ளார் சி.வி. சண்முகம்.

மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு எதிராக வேகமாக செயல்படுவதால் திமுக எதிர்ப்பு, அதிமுக வாக்கு வங்கியை பாஜக கவர்ந்து இழுத்துவிடக்கூடாது என்பதற்காகவும் இதுபோல பேசியுள்ளார். இதற்கு அண்ணாமலையும், அதிமுக கூட்டணியில் இல்லாவிட்டாலும் 2014 மக்களவைத் தேர்தல் போல தனித்து களம் இறங்கி கணிசமான வாக்கு வங்கியை பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக தான் சி.வி.சண்முகத்தை மூன்றாம் கட்டத் தலைவராக விமர்சனம் செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, புவனிகிரி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்மொழித்தேவன், முன்னாள் எம்.பி. திருத்தமணி ஹரி ஆகியோர் அண்ணாமலையை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளனர்.  குறிப்பாக அண்ணாமலையை அமைதிப்படை சத்தியராஜ் என அருண்மொழித்தேவன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

ஆனால், தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த பிறகு கூட 2009, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் மத சிறுபான்மை வாக்குகள் பெரிதாக கிடைக்கவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைந்த நிலையில், மதசிறுபான்மை வாக்குகள் வேறுவழியின்றி மோடியை தோற்கடிப்பதற்காக ஜெயலலிதாவுக்கு வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக அதிமுக, பாஜக கூட்டணி முறிந்தாலும் கூட திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தான் மத சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பான்மையாக குவிகிறது. இதை உணராமல் பாஜக கூட்டணியை கழற்றிவிட்டாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணியை மீறி சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக பெற முடியாது. மேலும், இருக்கும் ஹிந்து வாக்குகளையும் பிரதமர் மோடி என மையப்படுத்தி பாஜக இழுத்துச் செல்லும் வாய்ப்புள்ளது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலையை நோக்கி எடப்பாடி அணி நகர்கிறதோ என்ற தோற்றம் உருவாகியுள்ளது.

பாஜகவை எதிர்க்கும் சூழலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள், இரட்டை இலை சின்னம் என்ன ஆகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

பாஜக தலைமையில் மாற்று அணி

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, பாஜகவுக்கு எதிராக இபிஎஸ் இதுபோல காய்நகர்த்துவார் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டதால் தான் தேசிய பாஜக தலைமை பன்னீர்செல்வத்துக்கு அதிக மரியாதை கொடுத்து வந்தன.

மேலும், இபிஎஸ் தரப்பில் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கேபி.முனுசாமி, அருண்மொழித்தேவன், வைகைசெல்வன், செல்லூர் ராஜு,  ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் 2024 மக்களவைத் தேர்தலில் ஓ.பி.எஸ், பாஜக, டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கே.கே.செல்வக்குமார் தலைமையிலான தமிழர் தேசம் ஆகியோரை ஒருங்கிணைந்து 2014 போல திமுகவுக்கு மாற்றாக ஓர் அணியை கட்டமைக்கவே பாஜக விரும்புகிறது என்றார் ரிஷி.