எட்டிமடை கிராம மக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு

எட்டிமடை கிராமம் அருந்ததியர் தெருவில் வசிக்கும் மக்கள் வீட்டுமனை பட்டா, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். தற்போது இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை திருமலையம்பாளையம் கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம், எட்டிமடை கிராமம் அருந்ததியர் தெருவில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்கு வீட்டுவரி வசூலிக்கப்படவில்லை எனவும், 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவில் உள்ள தவறினால், அவர்களுக்கு வீட்டு வரி கட்டமுடியாமல் வீட்டுவரி ரசீதும் இல்லாமல், தங்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்காமல், பத்தாண்டுகளாக போராடி வருவதாகவும், அட்டவணை சாதியைச் சேர்ந்த ஏழை கூலித்தொழிலாளர்கள் எனவும், அவர்கள் இருட்டில் வாழ்வதுடன், அவர்களின் குழந்தைகள் இரவு நேரங்களில் படிக்க விளக்குகளை பயன்படுத்துவதாகவும், தங்கள் பகுதிக்கு சரியான வீட்டுமனை பட்டாவும், மின்சாரம் மற்றும் தெருவிளக்கு வசதியும் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அன்றைய தினமே அப்பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா சரி செய்யப்பட்டு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வீட்டு வரி நிர்ணயம் செய்ய விண்ணப்பிக்கும் முகாம் நடத்தப்பட்டது.

எட்டிமடை கிராமத்தின் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வீட்டு வரி ரசீதுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வீட்டு வரி ரசீது வழங்கிய பிறகு அவர்களுக்கு பொது சேவை மையம் மூலம் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கவும் உதவி செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மனுதாரர்களின் வீடுகளை ஆய்வு செய்து, விரைவாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.

மேலும், சூலூர் கண்ணம்பாளையம் கிராமத்தில் தனலட்சுமி நகரில் குடியிருந்து வரும் பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையான மின் இணைப்பு வழங்க கோரி மனு அளித்தனர்.

இந்த மனுவின் மீது ஆட்சியரின் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், அந்தபகுதியில் 25 மின்கம்பங்கள் அமைத்து 45 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.