கே.எம்.சி.ஹெச் – ஜிட்டோ இணைந்து நடத்தும் ‘ரன் ஃபார் மாம்’ மாரத்தான் போட்டி

கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையுடன் இணைந்து ஜிட்டோ (JITO) அமைப்பு ‘ரன் ஃபார் மாம்’ என்ற மாரத்தான் போட்டியை வரும் மே 15 ஆம் தேதி நடத்துகிறது. இந்த அமைப்பின் கோவை கிளையின் மகளிர் பிரிவு சார்பாக மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய்மையை கொண்டாடுவோம் என்கிற கருப் பொருளில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

மேலும், மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் குழந்தைகள் புற்றுநோய்க்கு சலுகை கட்டணத்தில் மருத்துவ சிகிச்சைகள் அளித்திட கேஎம்சிஹெச் மருத்துவமனை முன்வந்துள்ளது.

3,5,10 கிலோ மீட்டர் ஆகிய ஓட்டப்பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 3 கிலோ மீட்டர் ஓட்டப்பிரிவில் பங்கேற்போர் தங்களது அன்னையுடன் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி கட்டணம் வழங்கப்படுகிறது. போட்டியில் தங்களது குடும்பத்தினருடனும் பங்கேற்கலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் www.youtoocanrun.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நடைபெற்றது.

அப்போது JITO மகளிர் பிரிவு தலைவர் பூனம் பாஃப்னா கூறுகையில்: பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்னையருக்கும் குழந்தைகளுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பு என்றென்றும் குறைவது இல்லை என்று கூறிய அவர், தாய்மையைக் கொண்டாடுவோம் என்ற கருத்தில் ரன் ஃபார் மாம் மாரத்தான் நிகழ்ச்சியை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையுடன் இணைந்து நடத்துவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் என்றார்.

தொடர்ந்து கே.எம்.சி.ஹெச் துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி பேசுகையில், ஒரு உன்னத நோக்கத்திற்காக JITO கோவை மகளிர் பிரிவுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற உயர்வான பணிகளுக்கு கே.எம்.சி.ஹெச் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. மருத்துவ உதவி தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உலகத்தரமான சிகிச்சைகளை சலுகைக் கட்டணத்தில் கேஎம்சிஹெச் அளித்திடும் என்று கூறினார்.

கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி மற்றும் JITO கோவை தலைவர் ரமேஷ் பாஃப்னா செய்தியாளர் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.